மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. அமரர் கல்கி எழுதி மிகவும் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலை படமாக திரையில் பார்க்க அதன் வாசகர்கள் அனைவருமே ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் என பல நட்சத்திரங்கள் சோழ தேச வரலாற்று மாந்தர்களாக விரைவில் நம் முன் திரையில் உலா வர காத்திருக்கிறார்கள். அதன் முன்னோட்டமாக தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பொன்னி நதி என்கிற முதல் பாடலை நேற்று வெளியிட்டுள்ளனர்.
ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடலை இளங்கோ கிருஷ்ணா என்பவர் எழுதியுள்ளார். இந்தப்பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரபல மால் ஒன்றில் நட்சத்திரங்கள் பங்குபெற நடைபெற்றது. இந்த நிகழ்வே கார்த்தி பேசும்போது நடிகர் ஜெயராம் குறித்து ஒரு முக்கியமான விஷயத்தை குறிப்பிட்டார்.
“இப்படத்தின் கதை அனைவருக்கும் தெரியும். இருப்பினும், திரைப்படமாக பார்க்க வேண்டும் என்பதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கிறது. இப்படத்தில் பணியாற்றியது சுவாரசியமாக இருந்தது. நான், ஜெயம் ரவி மற்றும் ஜெயராம் சார் தான் அதிக நாட்கள் ஒன்றாக இருந்திருக்கிறோம். ஜெயராம் சாருடன் பணியாற்றுவது பாக்கியம். அவர் மட்டும் தான் நடிகன். நாம் வெறும் ‘ந’ மட்டும் தான் என்று நானும், ஜெயம் ரவியும் பேசிக் கொள்வோம். அந்தளவுக்கு திறமையான நடிகர் அவர்.
ஆழ்வார்கடியார் நம்பி 51/2 அடி உயரம். ஆனால், ஜெயராம் சார் 61/2 அடி, 51/2 அடியாக மாறுவதற்கு ஒரு விஷயம் செய்திருக்கிறார். அந்த ரகசியத்தை நான் இப்போது கூற மாட்டேன். ஆனால், அது கற்பனையிலும் நினைக்கமுடியாதது. அவருடன் நாங்கள் நடித்தது ஆசிர்வாதம் தான்”. என்று சஸ்பென்ஸ் வைத்து பேசினார் கார்த்தி அப்படி என்ன விஷயம் ஜெயராம் செய்தார் என்பது படம் வெளியாவதற்கு வெளிவரத்தான் போகிறது.