எட்டு தோட்டாக்கள் என்கிற தனது அறிமுக படத்திலேயே கவனம் ஈர்த்தவர் இயக்குனர் ஸ்ரீ கணேஷ். இயக்குனர் மிஷ்கினின் சீடரான இவர் தற்போது அதர்வா கதாநாயகனாக நடித்துள்ள குருதி ஆட்டம் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படம் ஆக்சன் படமாக உருவாகியுள்ளது. கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்த படம் வெளியாக இருப்பதை தொடர்ந்து இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படம் குறித்த தகவல்களை படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர்.

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் பேசும்போது, “இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் அதர்வா ரொம்பவே உதவியாக இருந்தார். அவர் என் மேல் வைத்திருந்த நம்பிக்கையை இந்த குருதி ஆட்டம் காப்பாற்றும். இந்த திரைப்படம் பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அறிமுக திரைப்படமாக அமைந்துள்ளது” என்று கூறினார்.

படம் பற்றி அதர்வா கூறும்போது, “ஸ்ரீ கணேஷ் இந்த படத்தின் கதையை சொல்லும்போது கதையின் அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அனைத்து கதாபாத்திரங்களையும் கோர்த்து ஸ்ரீ கணேஷ் நேர்த்தியான திரைப்படமாக மாற்றியுள்ளார்” என்று கூறினார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின் தனது சீடர் குறித்து பேசும்போது, “ஸ்ரீ கணேஷ் எப்போதும் அறத்துடன் வாழும் நபர். ஒரு உணர்வுபூர்வமான மனிதர். அவருடைய அந்த எண்ணங்கள் தான் இந்த திரைக்கதையை அமைக்க உதவியுள்ளது. எனது உதவியாளர்கள் எப்பொழுதும் சிறந்த படம் தான் எடுப்பார்கள்” என்று பாராட்டினார்