கமல் நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் மூன்றாம் தேதி வெளியாகி 50 நாட்களை கடந்து தியேட்டர்களில் தற்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வெற்றி தமிழ் திரையுலகிற்கு ஒரு புதிய எழுச்சியை கொடுத்துள்ளது என கூறலாம். லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், விஜய்சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட நட்சத்திர கூட்டம் என இந்த படத்தின் வெற்றிக்கு பலரும் உறுதுணையாக இருந்தாலும் இன்னொரு முக்கிய பங்களிப்பு இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் எங்கும் பிரம்மாண்டமாக வெளியிட்டது தான்.
இந்த நிலையில் உதயநிதிக்கு, அவரது இந்த பங்களிப்புக்கு பரிசு கொடுக்கும் விதமாக தனது ராஜ் கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படத்தில் உதயநிதி கதாநாயகனாக நடிக்கிறார் என்கிற அறிவிப்பை கமல் வெளியிட்டுள்ளார்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் துவங்கி 15 வருட காலம் ஆனதை தொடர்ந்து அந்த நிறுவனத்தில் வெளியிட்ட படங்கள் அதில் பங்காற்றிய படக்குழுவினர், தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக நேற்று நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட போது கமல் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதற்கு உதயநிதியும் நன்றி கூறியுள்ளார். இந்த நிகழ்வில் இயக்குனர் கவுதம் மேனன், சிம்பு மற்றும் பாலிவுட் நடிகர் அமீர்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.