தயாரிப்பாளர் சாய்பாபு முன்னணி நட்சத்திரங்கள் பலருக்கும் ஆடை வடிவமைப்பு செய்த பெருமை கொண்டவர்., சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பர்சனல் ஆடை வடிவமைப்பாளராக பல படங்களில் பணியாற்றியுள்ளார் குறிப்பாக எந்திரன் படத்தில் இவரது பங்களிப்பு ரொம்பவே முக்கியமானது. ரோபோ சம்பந்தப்பட்ட காட்சிகளில் 100க்கும் மேற்பட்ட ரோபோக்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்தது இவர் தான். சில வருடங்களுக்கு முன் ராம்கி, குஷ்பு இணைந்து நடித்த தாலி புதுசு என்கிற படத்தை தயாரித்தவர்.
இந்தநிலையில் ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டீஸ்வரி மூவிஸ் சார்பில் V.சாய் கிருஷ்ணா தயாரித்துள்ள படம் ‘மாயத்திரை’. இயக்குனர்கள் எழில், பாலா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய T.சம்பத்குமார். இந்தப்படத்தை இயக்கியுள்ளார். அடிப்படையில் திரைப்படக் கல்லூரி மாணவரான இவர் விஸ்காம் பேராசிரியரும் கூட இவர் சொன்ன கதை தயாரிப்பாளரை ரொம்பவே கவர்ந்து விட்டதால் நீண்டநாள் கழித்து மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளார்
கதாநாயகனாக அசோக்குமார் நடிக்க, சாந்தினி தமிழரசன், ஷீலா ராஜ்குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் முக்கிய வேடங்களில் காதல் சுகுமார், காதல் சரவணன், பாவா லட்சுமணன், நடன இயக்குனர்கள் சுஜாதா, தருண், இரவின் நிழல் படத்தில் நடித்துள்ள மாஸ்டர் ஆரவ் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். எஸ்.என்.அருணகிரி மற்றும் எஸ்.எஸ்.தமன் ஆகியோர் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவை இளையராஜா வேலுசாமியும், படத்தொகுப்பை கோடீஸ்வரன்-M.சுரேஷ் ஆகியோரும் கவனித்துள்ளனர். பாடலாசிரியர் ஞானகரவேல் பாடல்களை எழுதியுள்ளார்.
இயக்குனர் T.சம்பத்குமார். படம் பற்றி கூறும்போது, “23 வருடங்களுக்கு முன்பு நாகர்கோவில் பகுதியில் இருந்த ஒரு திரையரங்கில் தீ விபத்து ஏற்பட்டு 23 பேர் பலியான உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளேன். அதேசமயம் இந்தப்படம் வழக்கமான ஹாரர் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இதுவரை வந்த ஹாரர் படங்களில் பேய் பழிவாங்கும். இந்த படத்தில் பேய் பழிவாங்காது.. மன்னிப்பு என்பது மனித குலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல.. ஒரு பேய்கிட்டயும் அது இருக்குதுன்னு இந்த படத்துல சொல்லி இருக்கோம். இது ஒரு முக்கோண பேய் காதல் கதை என்று கூட சொல்லலாம் ஒரு பேயின் தியாகத்தை தான் இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். இதில் ஒன்றல்ல, இரண்டல்ல 26 பேய்கள் இந்தப்படத்தில் இருக்கின்றன” என்கிறார்.
“இந்த படத்தின் கதையை கேட்டதும் இதில் ஷீலா ராஜ்குமாரின் கதாபாத்திரம் என்னை ரொம்பவே கவர்ந்து விட்டது சாந்தினியின் கதாபாத்திரமும் கூடத்தான். இந்த இரண்டு கதாபாத்திரங்களுக்காக தான் இந்த படத்தை தயாரிக்க முன் வந்தேன்” இது ஷீலா ராஜகுமாரின் படம் என்றே சொல்லலாம்” என கூறுகிறார் தயாரிப்பாளர் சாய்பாபு..
வரும் ஆக-5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப்படத்தை, கேரளா மற்றும் கர்நாடகாவிலும் சேர்த்து அதிக திரையரங்குகளில் வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது..