தமிழ் சினிமாவில் தனது அடுக்கு மொழி பேச்சாலும் அதிரடி படங்களாலும் மற்றும் திரைப்படத்தில் உள்ள பல முக்கிய துறைகளிலும் தனது முத்திரையை பதித்து அஷ்டவதானி என பெயர் பெற்றவர் டி.ராஜேந்தர். சினிமாவில் நேரடியாக தனது பங்களிப்பை தராவிட்டாலும் வினியோகஸ்தர் சங்கம் போன்றவற்றில் முக்கிய பொறுப்பில் இருந்துகொண்டு சினிமா கலைஞர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக தனது பங்களிப்பை தந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதைத்தொடர்ந்து மேல் சிகிச்சை பெறுவதற்காக தனது குடும்பத்துடன் அமெரிக்கா கிளம்பி சென்றார் டி.ராஜேந்தர் அங்கு சிகிச்சை முடிந்தது தான் நலமாக இருப்பதாக புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டார்.

சில நாட்கள் ஓய்வு பெற்றபின் சென்னை திரும்புவதாக அப்போது கூறி இருந்த டி.ராஜேந்தர் இன்று காலை சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது தனது மேல்சிகிச்சைக்கு வெளிநாடு செல்ல உதவியதற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோருக்கு நன்றி கூறினார் டி.ராஜேந்தர்.

மேலும் சிம்புவின் திருமண பற்றி அப்போது கேட்கப்பட்ட கேள்விக்கு இறைவன் நிச்சயமாக எங்கள் வீட்டிற்கு நல்ல மருமகளாக, குலமகளாக அனுப்பி வைப்பான்” என்று முத்தாய்ப்பாக பதிலும் கூறியுள்ளார் டி.ராஜேந்தர்.