வரலாற்று காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து புதுமையான முயற்சியில் உருவாகியுள்ள படம் தான் மஹாவீர்யர். நிவின்பாலி நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் அப்ரிட் ஷைன் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே 1983 மற்றும் ஆக்சன் ஹீரோ பைஜு என இரண்டு ஹிட் படங்களை நிவின்பாலியை வைத்து இயக்கியவர். மஹாவீர்யர் படம் ரசிகர்களை கவருமா ? பார்க்கலாம்.
மன்னரான லாலுக்கு திடீரென ஒரு நாள் இரவு விக்கல் எடுக்கிறது. என்ன மருத்துவம் பார்த்தும் அந்த விக்கல் அடங்காததால் தனது மந்திரியான ஆசிப் அலியை அழைக்கும் ராஜா, அழகான இளம் பெண் ஒருவரை கண்டுபிடித்து தன்முன் கொண்டுவந்து நிறுத்துமாறு கூறுகிறார். இப்படி வேதனையுடன் சாவதை விட ஒரு பெண்ணுடன் சுகமாக இருந்துவிட்டு சாகிறேன் என்று அதற்கு காரணம் கூறுகிறார்.
ராஜா ஆசைப்படி மந்திரியும் கிராமத்திலிருந்து ஒரு அழகான இளம்பெண்ணான ஷான்வியை கொண்டு வந்து அவர் முன்னே நிறுத்துகிறார். ஆனால் ராஜா தன்னை துன்புறுத்தியதாக அவர்மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார் ஷான்வி.
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். கிராமம் ஒன்றுக்கு வருகை தரும் சாமியார் நிவின்பாலி மீது அங்குள்ள கோவிலில் இருந்த சாமி சிலையை திருட முயற்சித்தார் என ஊர் மக்கள் குற்றம் சாட்சி அவரை போலீசாரிடம் ஒப்படைக்கின்றனர்.
போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர். அவர்மீது சாட்டப்பட்ட குற்றத்தின் மீதான சாட்சிகள் விசாரிக்கப்படும்போது அவற்றையெல்லாம் தனது வாதத்தால் தூள் தூளாக்குகிறார் நிவின்பாலி. இந்த சமயத்தில் தான் அந்த ராஜா லால் மீது, இளம்பெண் ஷான்வி தொடர்ந்த வழக்கும் நீதிமன்றத்திற்கு வருகிறது.
இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி சித்திக்கிற்கு ராஜாவின் பிரச்சனை என்னவென்று தெரிய வருகிறது. அதற்கான தீர்வு அந்த இளம் பெண்ணிடம் தான் இருக்கிறது என்பதும் தெரியவர, ஒரு நீதிபதியாக செய்யக்கூடாத செயலை செய்ய உத்தரவிடுகிறார் சித்திக்.
அதைக் கண்டு பொறுக்க முடியாத நிவின்பாலி இந்த பிரச்சனைக்கு தான் தீர்வு காண்பதாக முன்வருகிறார். கடைசியில் என்ன ஆனது என்பது கிளைமாக்ஸ்.
தமிழ் ரசிகர்கள் இந்த படத்தை சாதாரணமாக புரிந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகம்தான். ஆரம்பத்தில் ராஜா காலம் மற்றும் தற்காலம் என இரண்டு விதமான காலகட்டங்களில் கதை நகரும்போது ஓரளவு சுவாரசியமாகத்தான் இருக்கிறது. ஆனால் இடைவேளைக்குப் பிறகு கதையின் போக்கு இலக்கை விட்டு பயணிக்க ஆரம்பிக்கிறது.
குறிப்பாக கிளைமாக்ஸுக்கு 20 நிமிடத்திற்கு முன்பான நீதிமன்ற காட்சிகள் இளம்பெண் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படுவது ஆகியவை சற்று எரிச்சலூட்டுவது உண்மைதான்.
நிவின்பாலி சாமியார் கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். முதல் பாதியில் நீதிமன்ற வாதங்களில் சபாஷ் பெறுகிறார். ஆனால் இடைவேளைக்குப் பிறகு படம் அவர் கையை விட்டு கதாநாயகி, ராஜா, மந்திரி ஆகியோர் வசம் சென்று விடுகிறது. அவர் வெறும் பார்வையாளராக மட்டுமே நிற்கிறார்.
நடிகர் லால் ராஜாவாக மிரட்டல் நடிப்பை வழங்க, அவரது மந்திரியாக நடிகர் ஆசிப் அலி பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கதாநாயகி ஷான்வி ஸ்ரீவாத்சவ், மிகத்துணிச்சலான இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்காகவே அவரை பாராட்டலாம்.. இயக்குனர் அப்ரிட் ஷைன் தனக்கும் நாயகன் நிவின்பாலிக்கும் மட்டுமே இந்த கதையை யோசித்ததற்கு பதிலாக ரசிகர்களையும் மனதில் வைத்து கதையை யோசித்து இருக்கலாம் என்றுதான் சொல்ல தோன்றுகிறது..