தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர் போனவர் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன். ஒத்த செருப்பு என்கிற படத்தில் ஒரே ஆளாக நடித்து மொத்த படத்தையும் தாங்கி ஆச்சரியப்படுத்தியவர், தற்போது இரவின் நிழல் என்கிற படத்தை இந்திய சினிமாவில் முதல் நான் லீனியர் படமாக சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்ற சாதனைக்குரிய படமாக இயக்கி உள்ளார் பார்த்திபன்.

இந்த படம் கடந்த வாரம் வெளியானது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே பார்த்திபனின் வித்தியாசமான சிந்தனையை பாராட்டும் விதமாக படம் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

இந்த நிலையில் தற்போது படத்தை பார்த்துவிட்டு மீண்டும் ஒரு முறை படக்குழுவினரை பாராட்டி அது குறித்த கடிதம் ஒன்றையும் பார்த்திபனுக்கு அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தை தற்போது பார்த்திபன் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

அந்த கடிதத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, “இரவின் நிழல் படத்தை அசாத்திய முயற்சியுடன் ஒரே ஷாட்டில் முழு படத்தையும் எடுத்து, அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்று, உலக சாதனை படைத்திருக்கும் நண்பன் பார்த்திபன் அவர்களுக்கும் அவரது அனைத்து படககுழுவினருக்கும் மதிப்பிற்குரிய ஏ.ஆர் ரகுமான் அவர்களுக்கும், முக்கியமாக படம் பிடித்த ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும்” என்று கூறி வாழ்த்தி உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.