கடந்த சில வருடங்களில் இயக்குனர் எஸ்.ஜே சூர்யா ஒரு நடிகராக வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அதில் தனது முத்திரையை பதித்து வருகிறார். ஒரு பக்கம் கதையின் நாயகனாகவும் இன்னொரு பக்கம் வில்லனாகவும் இன்னொரு பக்கம் குணச்சித்திர நடிகர் ஆகவும் என பலவிதமான பரிமாணங்களை வெளிப்படுத்தி நடித்து வரும் அவர் சமீபத்தில் வெளியான மாநாடு படத்தில் ஹீரோவுக்கு இணையான சொல்லப்போனால் அவரை விட அதிகமான பாராட்டுகளை பெற்றார்.
அதேபோல சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடித்த டான் படமும் அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்தது. இந்த நிலையில் தற்போது தெலுங்கில் விஜய் முதன்முதலாக நடித்து வரும் வாரிசு என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் எஸ்.ஜே சூர்யா. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
விஜய் நடித்த குஷி படத்தை இயக்கியதன் மூலம் அவருடன் முதல்முறையாக கைகோர்த்த எஸ்.ஜே சூர்யா அடுத்ததாக விஜய்யின் மெர்சல் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். அந்த வகையில் தற்போது வாரிசு படத்தில் நடிப்பதன் மூலம் மூன்றாவது முறையாக விஜய்யுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் எஸ்.ஜே சூர்யா.
தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி வரும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.