V4UMEDIA
HomeNewsKollywoodதேஜாவு ; விமர்சனம்

தேஜாவு ; விமர்சனம்

கிரைம் இன்வேஸ்டிகேஷன் திரில்லர் படங்களின் வரிசையில் வெளியாகி உள்ள இந்த தேஜாவு திரைப்படம், அந்த வரிசையில் மேலும் ஒரு படமா அல்லது கவனிக்க வைக்கும் படமா ? பார்க்கலாம்.

எழுத்தாளர் அச்யுத் குமார், தான் எழுதும் கதாபாத்திரங்கள் எல்லாம் தனக்கு போனில் மிரட்டல் கொடுப்பதாக போலீசில் புகார் அளிக்கிறார். அதே நாளில் அவர் எழுதும் கதையில் இடம்பெறும் வரும் பூஜா என்கிற கதாபாத்திரம் கடத்தப்படுகிறது. ஆனால் நிஜத்திலும் அதே போன்று பூஜா என்கிற பெண் கடத்தப்பட, அவர் டிஜிபி மதுபாலாவின் மகள் என்பதும் தெரிய வருகிறது.

கடைசியாக பூஜா போனில் பேசியபோது எழுத்தாளர் அச்யுத் குமாரின் பெயரையும் குறிப்பிட்டு இருப்பதால் போலீசார் அவரை சுற்றி வளைக்கின்றனர். இந்த விஷயம் மிகப்பெரிய அளவில் சென்சேஷனல் ஆக, மதுபாலாவுக்கு மேலிடத்தில் இருந்து இந்த வழக்கை முறையாக டீல் செய்யுமாறு உத்தரவு வருகிறது.

இதனைத் தொடர்ந்து காணாமல் போனது தனது மகள் என்பதால் இந்த வழக்கை ரகசியமாக விசாரிக்க அண்டர்கவர் ஆபிசர் அருள்நிதியை வரவழைக்கிறார் மதுபாலா. இந்த வழக்கின் ஒவ்வொரு ஸ்டெப்பாக முன்னேறி செல்லும் அருள்நிதிக்கு பூஜாவின் கடத்தல் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. ஆனால் எதற்காக கடத்தினார்கள் என்கிற உண்மை தெரிய வரும்போது டிஜிபி மதுபாலாவின் இன்னொரு முகம் வெளிப்படுகிறது.

பூஜாவின் கடத்தலுக்கு காரணம் என்ன ? இதில் மதுபாலா எப்படி சம்பந்தப்படுகிறார் ? இந்த கடத்தலுக்கு காரணமானவர்களை அருள்நிதி கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தினாரா என்பது கிளைமாக்ஸ்

இந்த படத்தை இயக்கியுள்ள அரவிந்த் சீனிவாசன் பத்திரிக்கை நிருபராக இருந்து இயக்குனராக மாறியவர். எந்த ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் தனது அனுபவத்தைக் கொண்டே இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆனால் இவரது முதல் படம் என்று சொல்ல முடியாதபடி படம் அவ்வளவு நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல வழக்கமான தமிழ் சினிமாவின் கிளிஷே காட்சிகள் எதுவும் இல்லாமல், ஏதோ மலையாள படம் பார்ப்பது போன்று ஆரம்பத்திலேயே கதைக்குள் நுழைந்து படம் முடியும் வரை, அடுத்து என்ன, அடுத்து என்ன என நம்மை இருக்காய் நுனியில் கட்டிப்போட்டு விடுகிறார் இயக்குனர் அரவிந்த் சீனிவாசன்.

அவர் உருவாக்கிய அந்த அண்டர்கவர் ஆபிஸர் கதாபாத்திரத்திற்கு அருள்நிதியும் டிஜிபி கதாபாத்திரத்தில் மதுபாலாவும் கச்சிதமாக பொருந்தி உள்ளார்கள். போலீஸ் காவலராக வரும் காளி வெங்கட் படத்தில் நகைச்சுவைக்கு உத்தரவாதம் தருகிறார். எழுத்தாளராக வரும் அச்யுத் குமார் அந்த கதாபாத்திரத்திற்கு ஏக பொருத்தம். ஆனால் அவர் பின்னால் ஒளிந்துள்ள டிவிஸ்ட் தெரிய வரும்போது நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

படத்தின் விறுவிறுப்புக்கு ஜிப்ரானின் இசையும் கை கொடுத்துள்ளது. படத்தின் துவக்கத்தில் இருந்தே விறுவிறுப்பு, திருப்பங்கள் என ஒரு முழு நீள கிரைம் திரில்லர் படத்தை திருப்தியான விருந்தாக பரிமாறி அனுப்பியுள்ளார் இயக்குனர் அரவிந்த் சீனிவாசன்.

Most Popular

Recent Comments