முன்பெல்லாம் நடிகர் விக்ரம் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு படத்தில் நடித்து தனது படங்களின் வெளியீட்டிற்கு மிகப்பெரிய இடைவெளி விட்டு வந்தார். ஆனால் தற்போது மீண்டும் சுறுசுறுப்புடன் களத்தில் இறங்கியுள்ள விக்ரமுக்கு இந்த வருடம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்த மகான் வெளியாகியுள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11 இல் வெளியாக இருக்கிறது. .அதை தொடர்ந்து வரும் செப்டம்பர் 30ல் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் வெளியாக இருக்கிறது. விக்ரமின் மூன்று படங்கள் ஒரே வருடத்தில் வெளியாவது என்பது இதுவரை நடந்திராத ஒன்று என்றே சொல்லலாம்.
அந்த அளவுக்கு இளம் ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் மீண்டும் தனது நடிப்பு பயணத்தில் வேகத்தைக் கூட்டியுள்ள விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா.ரஞ்சித் டைரக்சனில் நடிக்கிறார். இந்த படத்திற்கான துவக்கவிழா பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.
இந்த படத்தின் கதை பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிகழ்வது போல உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆங்கிலேயர் காலகட்டத்தில் கேஜிஎப் சுரங்கத் தொழிலாளர்கள் பட்ட கஷ்டங்கள் குறித்து இந்த படம் உருவாகப் போவதாக கூறியுள்ளார் பா.ரஞ்சித்.
இதற்கு முன் வெளியான கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்கள் நமக்கு காட்டிய கேஜிஎப் வேறு இந்த படத்தில் பா ரஞ்சித் காட்டப்போகும் கேஜிஎப் உண்மையிலேயே நிஜமான கேஜிஎப் கதையாக இருக்கலாம் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.