விஜய்சேதுபதியின் திரையுலக பயணத்தில் அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்தி கைதூக்கி விட்டவர் இயக்குனர் சீனுராமசாமி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான தர்மதுரை என்கிற வெற்றி படத்தின் மூலம் விஜய்சேதுபதிக்கு கமர்சியல் அந்தஸ்தையும் பெற்றுக்கொடுத்தார். இந்த நிலையில் இவர்களது கூட்டணியில் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவான மாமனிதன் திரைப்படம் சில பல சிக்கல்களை கடந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.

ரசிகர்களிடமும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்த படம் தற்போது ஜூன் 14ஆம் தேதி முதல் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் விதமாகவும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவும் மாமனிதன் படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது விஜய்சேதுபதி இந்த படம் பற்றி கூறும்போது இந்தப்படத்தை திரையரங்கில் தவற விட்டவர்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு, வீட்டில் இந்தப்படம் பார்ப்பவர்களுக்கு ராதாகிருஷ்ணன் நெருக்கமானவன் ஆகிவிடுவான். மாமனிதன் குறித்து என்னிடமும் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது, ஆனால் எதற்கும் நான் பதில் சொல்லவில்லை. ஒரு கதாப்பாத்திரம் நீங்கள் எதிர்பார்ப்பது போல் நடக்க முடியாது. நடக்க தேவையில்லை. சீனுராமசாமி சார் போல் ஒரு படம் எடுக்க இங்கு யாரும் இல்லை. இந்தப்படம் நான் டப்பிங் பண்ணும்போது பார்க்கையில், அத்தனை உயிர்ப்புடன் இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த படமாக இருந்தது. இந்தப்படம் காலத்தால் அழியாது, காலங்கள் கடந்து நிற்கும். இந்தப்படத்தை ஆஹாவில் பார்த்து ரசியுங்கள் நன்றி என்று கூறினார்