அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் அதிக அளவு வாசகர்களால் படிக்கப்பட்ட ஒரு நாவல். அதுமட்டுமல்ல இந்த நாவல் படமானால் எப்படி இருக்கும் என்கிற ஆர்வம் படித்து முடித்த ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருக்கும். கடந்த 50 வருடங்களுக்கு முன்பு மறைந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆரிலிருந்து அதன்பிறகு கடந்த 30 வருடங்களாக இயக்குனர் மணிரத்னம் வரை இந்த நாவலுக்கு உயிர் கொடுக்கும் முயற்சி நடைபெற்றது.
இதை தற்போது ஒருவழியாக சாத்தியமாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகியிருக்கும் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது.
எந்த ஒரு வரலாற்று படத்திற்கும் அதன் கதையை நகர்த்திச் செல்லும் விதமாக பின்னணியில் இருந்து ஒரு கம்பீர குரல் கதை சொல்ல ஆரம்பிக்கும். அதுதான் ரசிகர்களை படத்துடன் ஒன்றச் செய்வதற்கு பாலமாக இருக்கும். பொன்னியின் செல்வன் என்றும் அப்படி ஒரு கம்பீர குரல் தேவைப்பட்டுள்ளது. அந்த வகையில் அதன் கதையை துவங்கி நகர்த்திச் செல்லும் விதமாக உலகநாயகன் கமல் குரல் கொடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட 34 வருடங்களுக்கு பிறகு நாயகன் படத்தை தொடர்ந்து இந்த படத்தில் மணிரத்னத்துடன் இணைந்து தனது பங்களிப்பை வழங்கியுள்ளார் கமல்.