போனி கபூர் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெளியான படம் நெஞ்சுக்கு நீதி. உதயநிதியின் தாத்தா மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் தனது சுயசரிதையை குறித்து எழுதிய புத்தகத்திற்கு வைத்திருந்த பெயர் தான் இந்த நெஞ்சுக்கு நீதி.

அதே பெயரில் உருவான படத்தில் போலீஸ் அதிகாரியாக உதயநிதி நடித்திருந்தார். கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்திருந்தார். படம் வெளியாகி வெற்றிகரமாக 50 நாட்களாக தொட்ட நிலையில் படக்குழுவினர் அனைவருக்கும் 50வது நாள் ஷீல்டு வழங்கி கௌரவித்தனர் போனிகபூரும் உதயநிதியும்.

இந்த நிகழ்வில் அருண்ராஜா காமராஜ் பேசும்போது அடுத்ததாக உதயநிதியுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவேன் என்று கூறினார். தயாரிப்பாளர் போனி கபூர் கூறும்போதும் உதயநிதியின் படங்களை தயாரிக்க தான் ஆவலாக இருப்பதாகவும் அவரது அடுத்த படத்தையும் தயாரிக்க உள்ளதாகவும் ஒரு தகவலை வெளியிட்டார்.