தமிழில் வெளியான வரலாற்று நாவல்களில் மிக அதிக அளவில் வாசகர்களை கவர்ந்தது என்றால் அது அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தான். ஐந்து பாகங்களைக் கொண்ட இந்த நாவலை படமாக்கும் முயற்சி கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக அவ்வப்போது ஆரம்பிப்பதும் பின் அப்படியே அமுங்கி விடுவதுமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் இயக்குனர் மணிரத்தினம் இந்த நாவலை தற்போது இரண்டு பாகங்களாக படமாக்கியுள்ளார். இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 3௦ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தற்போது துவங்கியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய மணிரத்னம், “எம்ஜிஆர் தான் பீக்கில் இருந்த காலகட்டத்திலேயே இந்த படத்தை இந்த நாவலை படமாக்க முயற்சி செய்தார். அதில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்திலும் நடிக்க விரும்பினார். ஆனால் சில காரணங்களால் அப்போது அது அவருக்கு கைகூடாமல் போனது. சொல்லப்போனால் இதை எங்களுக்காக விட்டு வைத்து சென்றுள்ளார் என்று கூட சொல்லலாம். கடந்த முப்பது வருடங்களில் நானே இந்த படத்திற்காக மூன்று முறை முயற்சி செய்து தற்போது தான் அது திரை வடிவத்திற்கு வந்துள்ளது” என்று கூறியுள்ளார் மணிரத்னம்.

இந்த படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மன் ஆக ஜெயம்ரவி, ஆதித்த கரிகாலன் ஆக விக்ரம் என மூன்று நடிகர்களுக்கும் முக்கியத்துவம் தரும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஐஸ்வர்யாராய், த்ரிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இதில் இருப்பதால் தமிழ் சினிமாவின் பாகுபலி போல இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பதில் சந்தேகமில்லை.