ஒரு பக்கம் நகைச்சுவை நடிகர், இன்னொரு பக்கம் கதையின் நாயகன் என இரண்டையும் சமமாக பேலன்ஸ் செய்து நடித்து வருகிறார் யோகிபாபு. அப்படி அவர் நடித்த கோலமாவு கோகிலா, மண்டேலா, தர்ம பிரபு, கூர்க்கா உள்ளிட்ட சில படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அந்த வகையில் தற்போது அவர் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் பன்னிக்குட்டி.
இந்த படத்தில் நீண்ட நாளைக்கு பிறகு மேடைப்பேச்சாளர் திண்டுக்கல் லியோனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் சிங்கம்புலி, விஜய்டிவி ராமர், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அனுசரண் என்பவர் இயக்கியுள்ளார். “விலங்குகளை வைத்து படம் எடுப்பது சாதாரண விஷயம் இல்லை பல நெருக்கடிகளைக் கடந்து சில உத்திகளைப் பயன்படுத்தி தான் படம் எடுத்தோம். இந்த படத்தில் நிஜமான பன்னிகுட்டியை வைத்து தான் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். அது மிகவும் கடினமாக இருந்தது… இந்தப்படம் பார்த்து விட்டு வெளியே வரும்போது ஒரு சிரிப்புடன் வெளியே வருவீர்கள். நம்பிக்கை தான் வாழ்க்கை என்பதை இந்தப்படம் கற்றுக்கொடுக்கும்” என்று கூறியுள்ளார்