பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர் கதையாகி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களை சட்டம் எப்படி பார்க்கிறது, அவர்களுக்கான நியாயம் உடனடியாக கிடைக்கிறதா? என்ற பல கேள்விகளோடு உருவாகியிருக்கும் படம் தான் மெய்பட செய்..
அறிமுக இயக்குநர் வேலன் இயக்கியிருக்கும் இப்படம் பாலியல் குற்றம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு, பாலியல் குற்றங்கள் குறைவதற்கான வழியையும் சொல்லியிருக்கிறது.
இப்படத்தில் அறிமுக நடிகர் ஆதவ் பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக புதுமுகம் மதுனிகா நடித்துள்ளார். இவர்களுடன் ராஜ்கபூர், ஆடுகளம் ஜெயபால், ஓ.ஏ.கே.சுந்தர், பெஞ்சமின், ஞான பிரகாசம், சூப்பர் குட் சுப்பிரமணி, விஜயகணேஷ், தவசி, அட்டு முத்து, சிவா, ராஜமூர்த்தி, எமில் கணபதி, அனிஷ் உள்ளிட பலர் நடித்துள்ளனர்.
கதாநாயகி மதுனிகா பேசுகையில், “இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் அனைத்து பெண்களுக்கும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. பலர் பாலியல் தொடர்பான இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். நானும் கூட பாலியல் ரீதியான பிரச்சனைகளுக்கு ஆளாகியிருக்கிறேன். அதனால், இந்த படம் அனைவரையும் கனெக்ட் செய்யும். இந்த கதை இயக்குநர் என்னிடம் சொன்னபோது நான் பயந்துவிட்டேன். இந்த கதையில் என்னால் நடிக்க முடியுமா? என்று தோன்றியது. ஆனால், இயக்குநர் தான் எனக்கு தைரியம் கொடுத்து உங்களால் நடிக்க முடியும், நடியுங்கள் என உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார்.” என்றார்.
தயாரிப்பாளர் பி.ஆர்.தமிழ் செல்வம் கூறும்போது, “’மெய்ப்பட செய்’ உண்மையை செய் என்று அர்த்தம். சமூகத்திற்கு தேவையான ஒரு படமாகத்தான் இந்த படம் இருக்கும். மெய்ப்பட செய்’ படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் இதுவரை எந்த ஒரு தமிழ் படங்களிலும் சொல்லப்படவில்லை. இந்த படம் வெளியானால் நிச்சயம் பாலியல் குற்றங்கள் குறையும். பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதோடு அந்த தண்டனை எப்படி இருக்க வேண்டும், என்பதையும் இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம்” என்கிறார்..