விஷால் தற்போது லத்தி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வினோத் குமார் இயக்க, நடிகர்கள் ரமணா, நந்தா இருவரும் சேர்ந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றனர். ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தின் சண்டைக் காட்சிகளை பீட்டர் ஹெய்ன் வடிவமைத்து வருகிறார்.
ஏற்கனவே ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது விஷாலுக்கு சிறிதும் பெரிதுமாக நிறைய காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து படப்பிடிப்புக்கு ஓய்வு கொடுத்துவிட்டு கேரளா சென்று மூலிகை சிகிச்சை மேற்கொண்ட விஷால் சில நாட்கள் ஓய்வு எடுத்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தற்போதும் ஒரு அதிரடியான சண்டைக் காட்சியை படமாக்கி வருகிறார் பீட்டர் ஹெயின்.
போலீஸ் அதிகாரியான விஷால், கைதி ஒருவரை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு செல்லும்போது கிட்டத்தட்ட 100 ரவுடிகள் சூழ்ந்து கொண்டு அவர்களைத் தாக்க முயற்சிக்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்க ஒரே நேரத்தில் அத்தனை பேரையும் விஷால் எதிர்ப்பதாக இந்த சண்டைக்காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் எதிர்பாராமல் விஷாலின் காலில் அடிபட, அவரால் எழுந்து நிற்க கூட முடியவில்லை. அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு விஷால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.