கடந்த வெள்ளியன்று மாதவன் நடிப்பில் ராக்கெட்ரி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை இயக்கியதன் மூலம் முதன்முறையாக இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் மாதவன். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து பின் விடுதலை ஆனதும் தான் நிரபராதி என்று போராடி நிரூபித்தவர். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப்படம் பார்த்த அனைவரிடமும் பாராட்டு வார்த்தைகளையே பெற்று வருகிறது.
நெகடிவ் விமர்சனம் என யாருமே சொல்லவில்லை. இப்படி வாய்மொழியாக இது நல்ல படம் என செய்தி பரவி வந்த நிலையில், நல்ல படங்களை எப்போதுமே தானாக முன்வந்து பாராட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினி ராக்கெட்ரி படத்தை அனைவரும் பார்த்தே ஆகவேண்டும் என பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்மபூஷன் திரு நம்பி நாராயணன் அவர்களின் வரலாற்றை மிக தத்ரூபமாக நடித்து படமாக்கி இயக்குனராக தனது முதல் படத்திலேயே தலைசிறந்த இயக்குனர்களுக்கு இணையாக தானும் நிரூபித்திருக்கிறார் மாதவன்.
இப்படி ஒரு திரைப்படத்தை கொடுத்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றிகளும் பாராட்டுக்களும் என்று நெகிழ்ந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மாதவனும் சூப்பர் ஸ்டார் ரஜினி தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.