இயக்குனர் ஹரி தனது சொந்த மைத்துனரான அருண்விஜய்யுடன் முதன் முதலாக கூட்டணி சேர்ந்து உருவாக்கியுள்ள படம் யானை. இந்தப் படம் எப்படி இருக்கிறது ? பார்க்கலாம்.
மூன்று அண்ணன்கள் இருந்தாலும் இரண்டாம் தாரத்தின் மகன் என்பதால் அருண்விஜய் அந்த குடும்பத்தில் இருந்து அண்ணன்களால் சற்று மட்டுமாகவே பார்க்கப்படுகிறார். ஆனால் அண்ணன்களுக்காகவும் அவர்களது குடும்பத்திற்காகவும் தனது சுக துக்கங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு பாதுகாவலனாக இருக்கிறார் அருண்விஜய்.
அருண்விஜய்யின் நண்பன் இறந்து போன வழக்கில் எதிர்பாராமல் ஏற்பட்ட ஒரு நிகழ்வு காரணமாக அதில் சம்பந்தப்பட்ட கருடா ராமின் தம்பி போலீசாரால் சுடப்பட்டு இறந்து போகிறார். தன் தம்பியின் கொலைக்கு பழி வாங்குவதற்காக அருண்விஜய்யின் குடும்பத்தினரை காவு வாங்கத் துடிக்கிறார் கருடா ராம்.
இந்த நிலையில் சமுத்திரக்கனியின் மகள் அம்மு அபிராமி இஸ்லாமிய இளைஞர் ஒருவரை காதலித்து வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொள்கிறார். இவர்களது காதல் விஷயம் ஏற்கனவே அருண்விஜய்க்கு தெரியும் என்பதால் அவரை அந்த வீட்டை விட்டு வெளியே துரத்துகின்றனர் சமுத்திரக்கனியும் அவரது சகோதரர்களும்.
அதுமட்டுமல்ல அருண்விஜய் தனது அண்ணன் மகளை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்க, ஆனால் மகளைப் பெற்ற சமுத்திரக்கனியோ ஒருவேளை மகள் திரும்பி வந்தால் ஆணவக்கொலை செய்வதற்காக கருடா ராமுடன் கூட்டணி அமைக்கிறார். அம்மு அபிராமி திரும்பி வந்தாரா ? சமுத்திரக்கனி மகளையே ஆணவக்கொலை செய்தாரா ? அருண்விஜய் இந்த விஷயத்தில் அவரை எதிர்த்து என்ன செய்தார் என்பது மீதி படம்.
இதற்கு முன்னர் ஹரியின் படங்களில் விஷால் செய்தது போன்ற ஒரு கதாபாத்திரம் தான் அருண்விஜய்க்கும். ஆனால் அதை தனது பாணியில் கச்சிதமாக செய்திருக்கிறார் அருண்விஜய், அன்ன்களுடன் பாசம், வில்லனுக்கும் நல்லது செய்ய நினைப்பது, அண்ணன் மகள் தான் வைத்த நம்பிக்கையை உடைத்தது தெரிந்ததும் கலங்குவது என பல இடங்களில் நெகிழவைக்கும் நடிப்பை வழங்கியிருக்கிறார் அருண்விஜய்
ஹரி படங்களின் கதாநாயகிகளின் அச்சில் இருந்து கொஞ்சமும் மாறாமல் அழகாக பொருந்தியிருக்கிறார் நாயகி பிரியா பவானி சங்கர். கர்ஜிக்கும் வில்லனாக வருவார் என்று எதிர்பார்த்த வேளையில் அவ்வப்போது உறுமுவதோடு நின்று விடுகிறார் கருடா ராம்.
இன்னொரு நாயகி அளவுக்கு அம்மு அபிராமி நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு.. கிடைத்ததை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.. சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், சஞ்சீவ் என ஜாதியை தூக்கிப் பிடிக்கும் கதாபாத்திரங்களுக்கு இந்த மூவரும் அழகாக உயிர் கொடுத்திருக்கிறார்கள். யோகிபாபுவின் காமெடி படத்துக்கு ப்ளஸ் பாயிண்ட் என்றே சொல்ல வேண்டும். சின்னத்திரை காமெடியில் ரசிக்க வைத்த புகழ் சினிமாவில் வரும்போது மட்டும் எரிச்சலூட்டும் விதமாக நடிக்கிறார். ஏன் என்பது அவருக்கே வெளிச்சம்.
அருண் விஜயின் அம்மாவாக ராதிகா, அப்பாவாக ராஜேஷ், தாய்மாமன் இமான் அண்ணாச்சி ஆகியோர் படத்தோடு இணைந்து பயணிக்கும் எதார்த்தமான கதாபாத்திரங்களில் சோடை போகாத நடிப்பை வழங்கி உள்ளனர் இவர்கள் மூவரும்.
ஹரியின் படங்கள் என்றாலே வேகமும் விறுவிறுப்பும் இருக்கும். இந்த படத்தில் விறுவிறுப்பு இருந்தாலும் வேகம் குறைவு என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதேபோல ஹரியின் படங்களில் வழக்கமாக ஹீரோ ஸ்கெட்ச் போட்டு வில்லனுக்கு ஆட்டம் காட்டுவார். இந்தப் படத்தில் அருண்விஜய்யிடம் அது மிஸ்ஸிங்.
ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் ஒரு முறை கேட்பதோடு மனதில் நிற்காமல் மறைந்து விடுகின்றன. ஆனால் ஆணாவ கொலைக்கு எதிராக சாட்டையை சுழற்றி இருக்கும் படம் என்பதால் நம் முன் கம்பீரமாக நிற்கிறது இந்த யானை.