வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்த இயக்குனர் சுந்தர்.சி தனக்குள்ளும் ஒரு திறமையான நடிகன் ஒளிந்து இருக்கிறான் என்பதை வெளிச்சம் போட்டுககாட்டிய படம் தலைநகரம். தான் முதன்முதல் ஹீரோவாக நடித்த படத்திலேயே பக்காவான கதை, அருமையான காமெடி, நல்ல நடிகர்கள் என சரிவிகிதத்தில் தேர்ந்தெடுத்து நடித்திருந்தார் சுந்தர்.சி.
அந்த படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கி இருந்தார். சுந்தர்.சியின் ரைட் கதாபாத்திரமும் வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரமும் படம் வெளியான பின்பு ரசிகர்களிடம் இப்போதுவரை மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றுள்ளன. இந்த நிலையில்தான் தற்போது தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
இந்தப்படத்தை இயக்குனர் வி.இசட் துரை இயக்கி வருகிறார். கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். பட்டாம்பூச்சி படம் சமீபத்தில்தான் ரிலீஸாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் சுந்தர்.சி நடிப்பில் தலைநகரம் 2 படமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.