தமிழ் சினிமாவை பொறுத்தவரை கடந்த சில வருடங்களில் குறிப்பிடத்தக்க அளவிலேயே இளம் நடிகர்கள் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளனர். மேலும் நல்ல படங்களில் நடித்து தங்களது இடத்தையும் ஓரளவிற்கு தொடர்ந்து தக்க வைத்து வருகின்றனர் அப்படிப்பட்ட ஒரு சிலரில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் ஹரீஷ் கல்யாண்.
கடந்த சில வருடங்களாக அவர் நடித்த பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு மற்றும் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட அனைத்து படங்களும் டீசண்டான வெற்றியை பெற்றுள்ளது.

இந்த நிலையில் அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரீஷ் கல்யான் நடித்துவந்த படத்திற்கு தற்போது டீசல் என டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் இளைஞராக நடிக்கிறார் ஹரீஷ் கல்யாண். இந்த டீசல் படம் அவரது திரையுலக வண்டி இன்னும் நீண்ட தூரம் ஓடுவதற்கு ஏற்றவகையில் கூடுதல் மைலேஜ் தரும் என எதிர்பார்க்கலாம்.