நகைச்சுவை நடிகராக எண்பதுகளில் வலம்வந்த ஒய்.ஜி.மகேந்திரன் தற்போதும் நகைச்சுவையில் தான் சற்றும் குறைந்தவர் இல்லை என்பதை சமீபத்தில் வெளியான மாநாடு படத்தின் மூலம் நிரூபித்தார். இதன் மூலம் இளம் ரசிகர்களையும் இவர் தன் வசம் இழுத்துள்ளார்.
இன்னொரு பக்கம் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக நாடகமே உயிரென தொடர்ந்து நாடகங்களையும் நடத்தி வருகிறார் ஒய்.ஜி மகேந்திரன். இவரது நாடகங்களுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி தீவிர ரசிகர் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். இந்த நிலையில் சமீபத்தில் சாருகேசி என்கிற நாடகத்தை நடத்தினார் ஒய்ஜி மகேந்திரன்.
இந்த நாடகத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வந்து நேரில் கண்டு களித்தார். இந்த நிலையில் நாடகம் நடந்த தினத்தன்று அங்கிருந்த கூட்டம் காரணமாக சக கலைஞர்களை நேரில் வாழ்த்த முடியவில்லை என்று வருத்தப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினி ஒய்ஜி மகேந்திரனுக்கு போன் செய்து அவரது சாருகேசி நாடக குழுவினரை தனது வீட்டிற்கு அழைத்து வரச் செய்து அனைவரையும் வாழ்த்தி அவர்களின் நடிப்பை பாராட்டி உள்ளார். மேலும் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
இது பற்றி ஒய்ஜி.மகேந்திரன் கூறும்போது, “இந்த நாடகத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி நான் மகேந்திரனை பார்க்கவில்லை. நடிகர் திலகம் சிவாஜி அவர்களை தான் பார்த்தேன் என்று கூறினார். இதைவிட எனக்குப் பெரிய பாராட்டு எதுவும் இல்லை” என்று கூறியுள்ளார்