சமீபத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளியான மாயோன் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்புடன் தற்போது தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் கிஷோர் இயக்கி உள்ளார்.
அறிவியல், ஆன்மீகம், ஆலயம் என ஒரு புதுவித கலவையாக உருவாகி இருந்த இந்த படத்தை பார்க்க சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு வந்த ரசிகர்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம் பொது விடுமுறை தினமான ஞாயிறன்று சென்னையிலுள்ள ரோஹிணி திரையரங்கத்திற்கு இப்படத்தைக் காண அதிகளவிலான ரசிகர்கள் சென்றனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த கிருஷ்ண பகவானின் பிரம்மாண்டமான கட்அவுட்டிற்கு அருகே சில குழந்தைகள் கிருஷ்ணனின் வேடத்தை அணிந்து, வருகைத்தந்த ரசிகர்களை உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
பொதுவாக ‘அம்மன்’ படங்களுக்குத்தான் படக்குழுவினர் பிரம்மாண்டமான அளவில் அம்மனின் சிலைகளை வைத்து, ரசிகர்களை குறிப்பாக பெண் ரசிகைகளை கவர்வார்கள். ஆனால் கிருஷ்ண பகவானைப் பற்றிய படத்திற்கு சிறார்கள் கிருஷ்ண வேடமணிந்து வரவேற்பு அளித்ததுடன், அங்கு அமைக்கப்பட்டிருந்த கிருஷ்ணனின் கட்அவுட்டிற்கு பாலாபிசேகம் செய்யப்பட்டது பார்வையாளர்களை மட்டுமல்ல திரையுலகினரையும் ஆச்சரியப்படுத்தியது.
பின்னர் இதுகுறித்து விசாரித்தபோது தான் கிருஷ்ண பகவான் அவதரித்த நட்சத்திரமான ரோஹிணி நட்சத்திர தினம் என்றும்,,அதிலும் இந்த ரோஹிணி திரையரங்கத்தில் உள்ள கிருஷ்ண பகவானின் கட்அவுட்டிற்கு இது போன்று உற்சாகமான விழா நடைபெறுகிறது என்பது தெரியவந்துள்ளது.