சிறையில் தூக்குத்தண்டனைக்கு காத்திருக்கும் கைதி ஜெய். சாவதற்கு முன் தன்னைப் பற்றிய சில விஷயங்களை சொல்ல வேண்டுமென்பதற்காக பத்திரிக்கையாளர் ஹனி ரோஸை சந்திக்க விரும்புகிறார். அந்த சந்திப்பில் தான் செய்யாத கொலைக்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறுவதுடன், தான் வேறு பல கொலைகள் செய்துள்ளதாகவும் கூறி அதிர வைக்கிறார். இந்த தகவல் பத்திரிக்கையில் வெளியானதும் அவரது தூக்குத்தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அவர் செய்த கொலைகளை பற்றி ஒரு மாத கால அவகாசத்திற்குள் இதை விசாரிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிடுகிறது..
இதுபற்றி விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக சுந்தர்.சி நியமிக்கப்படுகிறார். முதலில் விசாரணைக்கு உடன்பட மறுக்கும் ஜெய் பின் கொஞ்சம் கொஞ்சமாக சுந்தர்.சிக்கு ஒத்துழைப்பு போல் நடித்து, ஒருகட்டத்தில் அவர் மூலமாகவே சிறையிலிருந்து வெளியேறி இன்னொரு கொலையும் செய்துவிட்டு, நீதிமன்றத்தில் அதை வைத்தே தான் நிரபராதி என வாதிட்டு விடுதலையும் ஆகிறார்.
அப்போதுதான் ஜெய்யின் திட்டம் இதுதான் என்பது சுந்தர்.சி க்கு தெரிய வர மீண்டும் அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித்தர முயற்சிக்கிறார்.. ஆனால் அதே சட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மீண்டும் கொலைகளில் இறங்குகிறார் ஜெய். இந்த முறை சுந்தர்.சிக்கு நெருங்கியவர்கள் மீது ஜெயின் வன்முறை பாய்கிறது. சுந்தர்.சியால் தடுக்க முடிந்ததா ? ஜெய்யை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கி தர முடிந்ததா என்பது மீதிக்கதை.
இதுவரை வெளியான சைக்கோ கொலைகாரர்கள் பற்றிய படங்களில் தொடர்ச்சியாக கொலைகள் நடக்கும். அதன்பிறகு அதிலுள்ள ஒற்றுமைகளை வைத்து அந்த சைக்கோ கொலைகாரன் யாரென்று கண்டுபிடித்து அவனை நெருங்குவார்கள்.. ஆனால் இந்த படத்தில் அப்படியே வித்தியாசமாக முதலிலேயே இவர்தான் சைக்கோ கொலைகாரன் என பார்வையாளர்களான நமக்கு முன்கூட்டியே சொல்லிவிட்டு அதன்பின் என்ன நடக்கிறது என்பதை படமாக இயக்கி உள்ளார் இயக்குனர் பத்ரி.
அதேசமயம் ஜெய் செய்த கொலைகளை பற்றி ரொம்பவே டீடைல் ஆக கூறாமல் அவற்றை போகிற போக்கில் பிளாஷ்பேக்காக காட்டிவிட்டு மீதி கதையை தற்காலத்தில் நடக்கும் விதமாக நகர்த்தியிருப்பதும் புதிய அம்சம்தான் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
மப்டியிலும் சஸ்பென்ஸனிலும் என படம் முழுதும் காக்கி யூனிபார்மே போடாத காவல்துறை அதிகாரியாக சுந்தர்.சி மிரட்ட வேண்டிய நேரத்தில் மிரட்டி, சராசரி மனிதனாக உணர்ச்சிகளுக்கு ஆளாக வேண்டிய நேரத்தில் பலவீனப்பட்டு என ஒரு இயல்பான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி உள்ளார் சுந்தர்.சி. இடைவேளைக்குப்பிறகு ஜெய்க்கும் இவருக்குமான மோதல் படம் நெடுக சூடு கிளப்புகிறது.
மன்மதன் அம்பு விட்டு இதுவரை காதலிகளை துரத்திக்கொண்டிருந்த ஜெய்க்குள் இப்படி ஒரு வில்லன் ஒளிந்துள்ளாரா என ஆச்சரியப்பட வைக்கிறது அவரது அசால்ட்டான நடிப்பு. ஏதோ ஒரு நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அடிக்கடி அவர் கழுத்தை வெட்டும்போது நமக்கே ஒரு கட்டத்தில் கழுத்து வலிக்கிறது. அதேசமயம் படம் முழுவதும் அதை கச்சிதமாக செய்தபடி சைக்கோ கொலைகாரனின் ஆவேசத்தையும் சராசரி மனிதனுக்கான பயத்தையும் சரிசமமாக வெளிப்படுத்தி நடித்துள்ளார். கொலைக்கான காரணமாக அவர் சொல்லும் விஷயமும் அதை அவர் சொல்லும் விதமும் கூட காமெடி கலந்து சொல்லப்பட்டிருப்பது ரசிக்க வைக்கிறது.
படத்தின் நாயகியாக பத்திரிக்கை நிருபராக நீண்ட நாளைக்கு பிறகு ஹனிரோஸ் தமிழில் தலை காட்டியுள்ளார். அவருக்கும் படம் முழுவதும் பயணிக்கும் வேடம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் ஜெய்யிடம் அடிபட்டு மிதிபட்டு பரிதாபத்தை அள்ளுகிறார்.
சுந்தர்.சியுடன் கூடவே பயணிக்கும் போலீஸ்காரராக வரும் இமான் அண்ணாச்சி ஒருகட்டத்தில் சுந்தர்.சியின் திட்டத்தைச் செயல்படுத்துவதாக கூறி ஜெய்யின் கோபத்துக்கு ஆளாகி அதிர்ச்சி முடிவுக்கு ஆளாவது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.
இவர்கள் தவிர படத்தில் நடித்துள்ள போலீஸ் அதிகாரிகள், சுந்தர் சி யின் தந்தையாக நடித்திருப்பவர், ஹனிரோஸ் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோரின் மகள்களாக நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் இயக்கியுள்ளார் இயக்குனர் பத்ரி நாராயணன். இடைவேளை வரை, படு ஸ்பீடாக செல்லும் கதை இடைவேளைக்குப்பின் குறிப்பாக கிளைமாக்ஸ் சமயத்தில் சற்றே நீளமாக இழுத்துக் கொண்டே செல்வது போல ஒரு உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும் அது படத்திற்கு எந்த விதத்திலும் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மொத்தத்தில் த்ரில்லர் பட பிரியர்களுக்கு இந்த பட்டாம்பூச்சி ஒரு சுவையான விருந்துதான்.