தென்னிந்திய திரையுலகை பொறுத்தவரை தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மூன்று திரையுலகினருக்கும் தமிழ் திரையுலகம் மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. அதனால்தான் இங்கே வெளியாகும் படங்கள் தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியிடப்பட்டாலும் நம்மூர் ஹீரோக்கள் அங்கே மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை பெறுகின்றனர்.
அதனாலேயே தற்போது விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க அழைப்பு வந்து தற்போது மூவரும் தங்களது முதல் தெலுங்கு படத்தில் நடித்து வருகின்றனர்.
ஹீரோக்களுக்கு மட்டுமல்ல இங்கே வெற்றிக்கொடி நாட்டிய இயக்குனர்களுக்கும் அங்கே ராஜமரியாதை தர தயாராக இருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்திய சூப்பர் டூப்பர் ஹிட்டான மாநாடு படத்தை இயக்கிய வெங்கட் பிரபுவுக்கும் தெலுங்கு திரையுலகில் படம் இயக்க அழைப்பு வந்தது.
அப்படி வந்த அழைப்பு பிரபல ஹீரோ நாகார்ஜுனா குடும்பத்திலிருந்து அவரது மகன் நாகசைதன்யா படத்தை இயக்குவதற்காக என்பதால் அதை தனது முதல் தெலுங்கு என்ட்ரி ஆக நினைத்து உள்ளே அடியெடுத்து வைத்துள்ளார் வெங்கட் பிரபு. இது நாகசைதன்யாவின் 22வது படம் வெங்கட் பிரபு இயக்கும் 11 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு திரையுலகில் திடீர் அதிர்ஷ்ட நாயகியாக மாறியுள்ள கிரீத்தி ஷெட்டி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அதுமட்டுமல்ல இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜாவும் அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைக்கிறார்கள் என்பது ஒரு சிறப்பு என்றால், இதுவரை யுவன் சங்கர் ராஜாவுடன் மட்டுமே பயணித்து வந்த வெங்கட்பிரபு தற்போது தனது பெரியப்பா இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுகிறார் என்பது கூடுதல் சிறப்பு.
இந்த படத்தின் துவக்க விழா பூஜை இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கங்கை அமரன், இயக்குனர் லிங்குசாமி ஆகியோருடன் சிவகார்த்திகேயன் மற்றும் ராணா இருவரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அனேகமாக தெலுங்கிலும் ஒரு ஜாலியான சினிமா பாணியை இந்த படம் மூலம் வெங்கட்பிரபு ஆரம்பித்து வைப்பார் என எதிர்பார்க்கலாம்.