பொதுவாக குழந்தைகளை மனதில் கொண்டு அவர்கள் ரசிக்கும் விதமாக மிருகங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் படங்கள் ரொம்பவே குறைவு. சென்சார் கெடுபிடி காரணமாக அப்படிப்பட்ட படங்களை யாரும் கொடுக்க முன்வருவதில்லை.

இந்தநிலையில் கன்னடத்தில் சார்லி 777 என்கிற படம் உருவாகி தமிழ் தெலுங்கு என பான் இந்தியா படமாக சமீபத்தில் வெளியானது. நாய்க்கும் மனிதனுக்குமான அன்பை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்திருந்தார். பாபி சிம்ஹா முக்கியமான கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இயக்குனர் கிரண்ராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
ஒரு நாயின் ஆசை என்னவென்று புரிந்துகொண்டு அதை நிறைவேற்ற போராடும் நாயகன் என்கிற கான்செப்ட்டே வித்தியாசமாக இருந்தது. அதனால் தானோ என்னவோ இந்த படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிடித்துப்போனதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரொம்பவே நெகிழ்ந்து போய் நடிகர் ரக்ஷித் ஷெட்டியை போனில் அழைத்து மனதார பாராட்டி உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியே தன்னை அழைத்து பாராட்டியதால் ஆஸ்கர் விருது கிடைத்தது போல் மகிழ்ந்துபோய் இத்தகவலை தெரியப்படுத்தியுள்ளார் ரக்ஷித் ஷெட்டி.