நடிகர் விஜய் கிட்டத்தட்ட 65 படங்கள் நடித்து முடித்துவிட்ட நிலையில் முதன்முறையாக தமிழ் மொழியைத் தாண்டி தெலுங்கில் அடி எடுத்து வைத்து அங்கே தனது முதல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கிவருகிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.
மற்றும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்ட பல தமிழ் நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாளை விஜய்யின் பிறந்த நாள் என்பதால் படக்குழுவினர் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை அறிவித்து விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளனர்.
படத்திற்கு தமிழில் வாரிசு என்றும் தெலுங்கில் வாராசுடு என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. குடும்பப்பாங்கான படமாக இது உருவாகி வருகிறது என ஏற்கனவே சொல்லப்பட்டு வருவதால் இந்த டைட்டில் இந்த படத்திற்கு பொருத்தமானது என்று தான் விஜய் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழில் முதன்முதல் விஜய் அறிமுகமான நாளைய தீர்ப்பு படத்தில் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரனின் வாரிசாக தான் விஜய் அறிமுகமானார். இப்போது தெலுங்கில் அவர் முதன்முதலாக நடிக்கும் படத்திற்கும் வாரிசு என டைட்டில் வைக்கப்பட்டு வாரிசாகவே அறிமுகமாகி இருப்பது ஆச்சரியமான ஒற்றுமை தான்.