V4UMEDIA
HomeNewsKollywoodநயன்தாரா பட ஒளிப்பதிவாளர் சமாளித்த 3 சவால்கள்

நயன்தாரா பட ஒளிப்பதிவாளர் சமாளித்த 3 சவால்கள்

சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் O2 என்கிற திரைப்படத்தில் வெளியானது. ஜிஎஸ் விக்னேஷ் என்கிற அறிமுக இயக்குனர் இந்த படத்தை இயக்கியிருந்தார். மலைப்பாதையில் சரிவில் சிக்கி கொண்டு பேருந்துக்குள் இருந்து அனைவரும் எப்படி தப்பித்தனர், குறிப்பாக ஆக்சிஜன் பற்றாக்குறையால் அங்கிருந்த அனைவரும் நயன்தாரா மகனிடம் இருந்த ஆக்சிஜன் சுவாச குழாயை பறிப்பதற்காக எப்படி முயற்சிக்கின்றனர் என்பதை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகி இருந்தது.

ஒரு அறைக்குள் காட்சிகளை படமாக்குவதே மிக கடினமான வேலை என்கிற நிலையில் ஒரு பேருந்துக்குள் அதுவும் விபத்தில் சிக்கிக் கொண்டதாக காட்டப்படும் பேருந்துக்குள் காட்சிகளை படமாக்குவது என்பது மிகச் சவாலான விஷயம்தான். அதை அழகாக சாதித்து காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் தமிழழகன். படம் வெளியான பிறகு இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்த படத்தில் பணியாற்றியது குறித்து அவர் கூறும்போது, “நயன்தாரா மேடம் போன்ற ஒரு பெரிய நடிகையை வைத்துக்கொண்டு பணியாற்றும் போது தேவையில்லாமல் அவர்களுடைய நேரத்தை வீணடிக்க கூடாது. அதே சமயம், தயாரிப்பாளர் திட்டமிட்ட நாட்களுக்குள் படத்தை முடிக்க வேண்டும், அதே சமயம் படமும் தரமாக இருக்க வேண்டும், என்ற பல சவால்கள் இருந்தது. அவற்றை சரியான முறையில் சமாளிக்க படப்பிடிப்புக்கு முன்பு 2 வருடங்களாக நான் மேற்கொண்ட பணிகள் அவற்றை சரியாக செய்ய எனக்கு பெரிதும் கைகொடுத்தது.

படம் முழுவதும் கேமராவை தோளில் வைத்து தான் காட்சிகளை படமாக்கினேன். இது ரொம்ப சிரமமான விஷயம் என்றாலும் படத்திற்கு அது தான் மிக முக்கியம். உயிருக்காக போராடும் ஒரு கதாப்பாத்திரத்தின் உணர்வுகளை ரசிகர்களிடம் கடத்த வேண்டும், அதேபோல் ஒரு பயணியின் பதற்றமான சூழ்நிலை மற்றும் பயம் போன்ற உணர்வுகளை மிக சரியாக ரசிகர்களிடம் கடத்த வேண்டும் என்பதால், நானும் பேருந்தில் சிக்கிக்கொள்ளும் ஒரு கதாப்பாத்திரமாகவே பணியாற்றினேன்.

படத்தை பார்த்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சார், படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. நிச்சயம் இந்த படம் எங்கள் நிறுவனத்திற்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்கும், என்று சொன்னது தான் எனக்கு கிடைத்த முதல் பாராட்டு. அதிலும் குறிப்பாக நயன்தாரா மேடம் படப்பிடிப்பின் போது இந்த கதைக்களத்தையும் அதை படமாக்குவதில் இருக்கும் சிக்கல்களையும் மிக சரியாக புரிந்துக்கொண்டு ஒத்துழைப்பது கொடுத்ததும், ஒவ்வொரு காட்சி நடித்து முடித்ததும் என்னிடம் ”ஒகேவா தமிழ்..” என்று கேட்டது என்னால் மறக்க முடியாது. எனது இந்த சிறப்பான பணிக்கு அவர்களுடைய ஒத்துழைப்பும் ஒரு காரணம்.” என்றார்.

மண்ணுக்குள் புதைந்த ஒரு பேருந்துக்குள் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழும் என்பதை லைட்டிங் மூலமாகவே வெளிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் தமிழ் அகழன், பேருந்துக்குள் சிக்கிக்கொள்ளும் கதாப்பாத்திரங்கள் நேரம் நேரம் ஆக ஆக, அவர்களுடைய முக தோற்றம், உடல் மொழி போன்றவற்றையும் மிக கச்சிதமாக படமாக்கியிருப்பதால் தான் ’O2’ திரைப்படம் ரசிகர்களை எளிதில் சென்றடைந்திருக்கிறது.

அதுமட்டும் இன்றில், ஒரு பேருந்தில் நடக்கும் கதையை ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படாத வகையில் ஒவ்வொரு காட்சிகளின் கோணத்தையும் வித்தியாசமான முறையில் காட்டியிருப்பதும் இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.

18 நாட்களில் ’மன்மதலீலை’ படத்தின் முழு படப்பிடிப்பையும் முடித்து பாராட்டு பெற்ற ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன், ’O2’ படத்தின் மூலம் ஒளிப்பதிவில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டிருக்கிறார் என்றால் அது மிகை இல்லை. நிச்சயம் இந்த படத்தின் மூலம் பல அங்கீகாரங்களை மட்டும் இன்றி பல விருதுகளையும் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன் பெறப்போவது உறுதி என்று ஊகடங்கள் பாராட்டி வருவதால், அவர் சந்தோஷமடைந்துள்ளார்.

Most Popular

Recent Comments