பொதுவாக ஒரு படம் சூப்பர்ஹிட் ஆனால் அந்தப் படத்தில் பணியாற்றிய படக்குழுவினருக்கு சம்பந்தப்பட்ட நடிகரோ இயக்குனரோ தயாரிப்பாளரோ பரிசளிப்பது வழக்கம். அப்படி சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு விலை மதிப்புள்ள கார் ஒன்றை பரிசளித்துள்ளார் கமல். அதேபோல அவருடைய உதவி இயக்குனர்கள் 12 பேருக்கு விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களையும் பரிசாக அளித்தார். அதுமட்டுமல்ல இந்த படத்தில் சில நிமிட காட்சிகளே நடித்திருந்தாலும் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நட்புக்காக நடித்துக் கொடுத்த சூர்யாவுக்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் கடிகாரம் ஒன்றை பரிசளித்தார் கமல்.
அதேசமயம் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இரண்டு கதாநாயகர்களான விஜய்சேதுபதி, பஹத் பாசில் ஆகியோருக்கு கமல் எதுவும் பரிசளித்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அனிருத்திடம் கமல் உங்களுக்கு என்ன பரிசு தந்தார் என பத்திரிகையாளர்கள் கேட்டபோது கமல் படத்திற்கு இசையமைப்பதே எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு தான் என்று கூறியிருந்தார்.
அதேபோல தற்போது மாமனிதன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ள வந்த நடிகர் விஜய்சேதுபதியிடம் கமல் உங்களுக்கு என்ன பரிசளித்தார் என்கிற அதே கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சாதுரியமாக பதிலளித்த விஜய்சேதுபதி கமல் சாருடன் நான் இணைந்து நடித்ததே எனக்கு மிகப்பெரிய பரிசு. இப்படி ஒரு படத்தில் நடிப்பேன் என்றெல்லாம் நான் கனவில் கூட நினைத்ததில்லை. ஆனால் அது நடந்திருக்கிறது. இதைவிட வேறென்ன வேண்டும் என்று கூறினார்.
அந்தவகையில் அனிருத்தும் விஜய்சேதுபதியும் கமல் படத்தில் இணைந்து பணியாற்றியதையே மிகப்பெரிய பரிசாக நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டு உள்ளார்கள்.
அதேசமயம் நேற்று நடைபெற்ற இந்த படத்தின் வெற்றி சந்திப்பில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிருத், விஜய்சேதுபதி, படத்தை வெளியிட உதயநிதி என அனைவருக்கும் தனது அன்பு முத்தங்களை பரிசாக அளித்தார் கமல். இவர்களை பொருத்தவரை இதுவும் விலைமதிப்பில்லாத ஒரு பரிசுதான்.