கவர்ச்சி பக்கம் பார்வையை திருப்பாமல் குடும்பப்பாங்கான அதேசமயம் சற்றே மாடர்னான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சுனைனா. கிட்டத்தட்ட 15 வருடங்களாக திரையுலகில் தாக்குப்பிடித்து நீடித்து வரும் அவர் தற்போது கூட விஷாலுக்கு ஜோடியாக லத்தி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இது ஒரு பக்கமிருக்க கதையின் நாயகியை மையப்படுத்தி தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழி படமாக உருவாகி வரும் ரெஜினா என்கிற படத்தில் தற்போது நடித்து வருகிறார் சுனைனா. மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா என்பவர் இந்தப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஸ்டார் என்கிற படத்தை இவர் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து சுனைனா கூறும்போது, “இந்த இயக்குனரின் முந்தைய இரண்டு படங்களை விட இந்த ரெஜினா திரைப்படத்தின் திரைக்கதை படு ஸ்டைலாக இருக்கிறது. இந்த படத்தின் கதையை அவர் கூறும்போது எனக்கு உடனடியாக படத்தை பார்க்கவேண்டும் போல ஆர்வத்தை தூண்டுவதாக இருந்தது. இந்த படத்தில் ஒரு சாதாரண குடும்பத் தலைவியாக நான் நடித்துள்ளேன்.. சாதாரண ஒரு பெண் சில அசாதாரண சம்பவங்களால் எப்படி பாதிக்கப்படுகிறாள், அதை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதை பதைபதைக்கும் சம்பவங்களுடன் இந்தப்படத்தின் காட்சி படுத்தியுள்ளார் இயக்குனர் டோமின் டி சில்வா. இந்த படம் எனது திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும்” என்று கூறியுள்ளார் சுனைனா.