குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்கும்படியான, தரமான, உணர்வுபூர்வமான, குடும்ப உறவுகளை வலியுறுத்தும் விதமான படங்களை இயக்கி வருபவர் சீனுராமசாமி. கதையில் மட்டுமல்லாது தனது படத்தின் பாடல்களிலும் இசையிலும் மிகுந்த கவனம் செலுத்துபவர். அந்தவகையில் பாடல்களுக்காகவே தனது படம் மூலமாக இரண்டு முறை தேசிய விருதும் பெற்றவர்.
இந்த நிலையில் விஜய்சேதுபதி, காயத்ரி நடிப்பில் மாமனிதன் என்கிற படத்தை சீனுராமசாமி இயக்கி உள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே முடிந்துவிட்ட இந்த படம் ஒரு வழியாக தற்போது ஜூன் 24-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த படத்திற்கு இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைத்துள்ளார்கள். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. ஆனால் இந்த நிகழ்வில் இளையராஜாவோ யுவன்சங்கர்ராஜாவோ என யாருமே கலந்து கொள்ளவில்லை. இந்தநிலையில் இந்த நிகழ்வில் பேசிய சீனு ராமசாமி தனது மனக்குமுறலை கொட்டித் தீர்த்து விட்டார்.
இந்த படத்திற்கு முதலில் இளையராஜா மற்றும் அவரது இரண்டு மகன்களான யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகிய மூவரும் இணைந்து இசையமைப்பதாக தான் முடிவானது. ஆனால் சில காரணங்களால் கார்த்திக் ராஜாவை அவர்களே ஒதுக்கி விட்டார்கள். இதில் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை அதேபோல நான் விரும்பிய பாடலாசிரியர்களையும் இந்த படத்தில் பணியாற்ற வைக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல இந்த படத்தின் பாடல் கம்போசிங் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு என எந்த ஒரு இசைப்பணியிலும் எனக்கு இளையராஜாவிடம் இருந்து அழைப்பு வரவில்லை. யுவன் சங்கர் ராஜாவும் அதை கண்டுகொள்ளவில்லை. ஒரு இயக்குனரான நானே புறக்கணிக்கப்பட்டு உள்ளேன்” என்று கூறியுள்ளார் சீனுராமசாமி.