ஒரு பக்கம் ஒளிப்பதிவாளராக செலக்டிவ் ஆன படங்களில் பணியாற்றிக் கொண்டே இன்னொரு பக்கம் பிஸியான நடிகராக நடித்து வருகிறார் நட்டி நடராஜ் என்கிற நடராஜ் சுப்ரமணியம். கடைசியாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தனுசுடன் அவர் இணைந்து நடித்த கர்ணன் படத்தில் இவரது வில்லத்தனமான கதாபாத்திரம் பாராட்டுகளைப் பெற்றது.
இந்த நிலையில் தற்போது கூராய்வு என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் நட்டி. இந்த படத்தில் கதாநாயகியாக சுபபிரியா மலர் என்பவர் நடிக்கிறார். இவர் இயக்குனர் மு.களஞ்சியம் இயக்கிய முந்திரிக்காடு என்கிற படத்தில் அறிமுகமானவர்.
மேலும் மனோபாலா, இளவரசு, போஸ் வெங்கட், ரவிமரியா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். இதற்கு முன்பாக சாயம் என்கிற படத்தை இயக்கிய ஆண்டனி சாமி இந்த படத்தை இயக்குகிறார்.
போஸ்ட் மார்டம் பின்னணியில் இந்த கதை உருவாகி இருப்பதால் படத்திற்கு கூராய்வு என டைட்டில் வைத்துள்ளார்கள். 2018 ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்த படத்தின் கதையை உருவாக்கியுள்ளதாக கூறும் ஆண்டனி சாமி இந்த படம் நிச்சயமாக ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் விதமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
வரும் ஜூலை 13ஆம் தேதி துவங்கி புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் ஒரே கட்டமாக இந்த படத்தில் படப்பிடிப்பை நடத்த இருக்கிறார்கள்