அண்ணாத்த படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் அவரது 169-வது படத்தை யார் இயக்குவார்கள் என முதலில் ஒரு சீட்டு குழுக்கல் போட்டியே நடைபெற்றது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக நெல்சன் திலீப்குமாருக்கு அந்த வாய்ப்பு சென்றது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு பேட்ட, தர்பார் ஆகிய படங்களை தொடர்ந்து சூப்பர் ஹிட் பாடல்களை தர இணைந்துள்ளார் இசை அமைப்பாளர் அனிருத்.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்தும் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வந்தனர். சிலர் தங்களது யூகத்தின் அடிப்படையில் சில செய்திகளை வெளியிட்டு வந்தனர். அப்படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக இந்த படத்திற்கு ஜெயிலர் என டைட்டில் வைக்கப்பட இருப்பதாக ஒரு செய்தி கசிந்தது. இந்த நிலையில் அதுதான் உண்மை என பறைசாற்றும் விதமாக இன்று ஜெயிலர் என்கிற டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட யாருடைய படங்களும் இடம்பெறாமல் ரத்தக்கறை படிந்த ஒரு மிகப்பெரிய கத்தியை மட்டும் வைத்து இந்த போஸ்டர் டிசைன் செய்துள்ளார்கள். இந்த படம் 100 சதவீதம் ஆக்சன் படமாக இருக்கும் என்பதற்கு இந்த ஒரு போஸ்டரே போதும் என சந்தோசத்தில் குதிக்கிறார்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள்.