தமிழ் சினிமாவில் உணர்வுபூர்வமான படங்களை கொடுக்கும் மிகச்சில இயக்குனர்களில் சீனு ராமசாமியும் ஒருவர் தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், நீர்ப்பறவை, தர்மதுரை ஆகிய படங்களுக்கு பிறகு மீண்டும் விஜய்சேதுபதியும் இவரும் இணைந்து பணியாற்றி உள்ள படம் மாமனிதன்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி விட்டாலும் சில காரணங்களால் இந்த படத்தின் வெளியீடு தாமதமாகிக்கொண்டே வந்தது. இந்த நிலையில் இந்த படம் வரும் ஜூன் 24ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9 வெளியிடும் இந்த படத்தில் கதாநாயகியாக காயத்ரி, குரு சோமசுந்தரம் மற்றும் முக்கிய வேடத்தில் பேட்ட படத்தில் நடித்த மணிகண்டன் ஆச்சாரி ஆகியோர் நடித்துள்ளனர் யுவன்சங்கர்ராஜா இளையராஜா இருவரும் இணைந்து இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளனர்.
இந்த படம் தற்போது வெளியாக உள்ள நிலையில் மாமனிதன் என்கிற தலைப்பிற்கு ஏற்றமாதிரி வாழ்ந்து மறைந்த திரையுலக மாமனிதர்களான புரட்சித்தலைவர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கலைஞர் கருணாநிதி ஆகியோரின் சிலைகள் அமைந்துள்ள இடத்திற்கு சென்று அவர்களை வணங்கி மரியாதை செலுத்தியுள்ளார் சீனு ராமசாமி.
இதுபற்றி அவர் கூறும்போது “இந்த தமிழ்ச்சினிமாவின் மாமனிதர்கள் எனக்குள் உண்டாக்கிய கலை உணர்வுக்கு நன்றி கூறும் விதமாக என் அன்பை மலர்களாக சமர்ப்பித்தேன்” என்று கூறியுள்ளார்