இமைக்கா நொடிகள் படத்தை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கிவரும் படம் கோப்ரா. இந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தப்படத்தில் கேஜிஎப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், மிருனாளினி ரவி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
கனிகா, பத்மபிரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இவர்களுடன் மலையாள நடிகர்களான ரோஷன் மேத்யூ, சர்ஜுனோ காலித், வில்லன் நடிகர் பாபுராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இதில் இளம் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது
இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா தாக்கம் காரணமாக பல நாட்களாக இழுபறியாகவே நடந்து வந்த நிலையில், ஒருவழியாக சமீபத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்தனர். இதனைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக விக்ரம் அவரது மகன் துருவ் இருவரும் இணைந்து நடித்த மகான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் ஓடிடி ரிலீசாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்காமாலேயே கடந்து சென்றது.
ஆனால் மிகவும் எதிர்பார்க்க வைத்துள்ள இந்த கோப்ரா தியேட்டர்களில் வெளியாகிறது. இந்தப்படத்தில் விக்ரம் கிட்டத்தட்ட எட்டு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். அதனால் கமர்சியல் அம்சங்களுக்கு இந்தப் படத்தில் பஞ்சம் இருக்காது என்றே தெரிகிறது.