சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களில் இந்த படம் பெரிது, அந்தப் படம் பெரிது என பிரித்துப் பார்க்க முடியாவிட்டாலும், கடந்த 15 வருடங்களுக்கு முன்பு வெளியான சிவாஜி படம் ரொம்பவே ஸ்பெஷல் என்று சொல்லலாம். காரணம் இயக்குநர் ஷங்கர் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து அவர் அடுத்ததாக எப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவார் என ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் கிட்டத்தட்ட பல வருடங்கள் கழித்து இருவரும் இந்த படத்தில் ஒன்று சேர்ந்தனர்.
பாரம்பரியமிக்க ஏவிஎம் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. இவர்களுடன் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி அமைத்தார். இந்தப்படம் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலும் பல வசூல் சாதனைகளை படைத்து, உலக அரங்கில் தமிழ் சினிமாவிற்கான ஒரு மிகப்பெரிய கவுரவத்தையும் புதிய வியாபார எல்லையையும் உருவாக்கிக் கொடுத்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இந்தப்படத்தில் இடம்பெற்ற சூப்பர்ஸ்டார் ரஜினி பேசும் பஞ்ச் டயலாக்குகள் இப்போதும் கூட உயிருடன் உலாவிகொண்டிருகின்றன. அப்படி ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற அருமையான விருந்து படைத்த இந்த சிவாஜி திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்களும் இதனை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஷங்கர், சூப்பர் ஸ்டார் ரஜினியின் வீட்டிற்கே நேரில் சென்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் இந்த படம் குறித்த விஷயங்களை, இனிமையான அனுபவங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.
இந்த சந்திப்பின்போது ஷங்கரின் மகளும், தற்போது புதிதாக விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக மாறியுள்ள அதிதியும் உடன் சென்றிருந்தார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அதிதி செல்பி எடுத்துக் கொண்டு அதை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.