கமல் பட கதாநாயகிகளில் ரொம்பவே ஸ்பெஷலானவர் நடிகை கோவை சரளா. வெறும் நகைச்சுவை நடிகையாக நடித்துக் கொண்டிருந்த அவரை சதிலீலாவதி படத்தில் தனக்கு ஜோடியாக, கதாநாயகியாக அறிமுகப்படுத்தி அவரால் கதாநாயகியாகவும் நடிக்க முடியும் என அவரது திறமையை வெளிப்படுத்தியவர் கமல்.
அதன் பின்னர் வந்த வருடங்களில் நகைச்சுவை நாயகியாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குணச்சித்திர நடிகையாகவும் உருமாறினார் கோவை சரளா. குறிப்பாக கொம்பன் படத்தில் கார்த்தியின் அம்மாவாக குணச்சித்திர கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார் கோவை சரளா.
அதைத்தொடர்ந்து தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள செம்பி என்கிற படத்தில் 90 வயது பெண்மணியாக நடித்துள்ளார் கோவை சரளா. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கோவை சரளாவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் கோவை சரளா தனது படத்தின் ட்ரெய்லரை கமலிடம் காட்டி வாழ்த்துக்கள் பெறவும் கமல் நடித்து தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் படத்திற்காக தனது வாழ்த்துக்களை தெரிவிக்கவும் கமலை அவரது இல்லத்தில் செம்பி படக்குழுவினருடன் நேரில் சென்று சந்தித்துள்ளார்.
செம்பி ட்ரெய்லரை பார்த்த கமல் கோவை சரளாவை நடிப்பு ராட்சசி என்று பாராட்டியுள்ளார். இது வசிஷ்டர் வாயால் விசுவாமித்திரர் பிரம்மரிஷி என்ற பட்டம் பெற்றது போல கோவை சரளாவுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் எனது நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
அப்புறம் இந்த படத்தில் முக்கியமான ஒரு விஷயம் தனது முதல் படத்திற்காக 40 கதை கேட்டு, கதை கேட்கும்போதே தூங்கிவிட்ட நடிகர் அஸ்வின் தான் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.