தமிழ் சினிமாவில் மினிமம் கியாரண்டி நடிகராக வலம் வருபவர் நடிகர் விமல். குறிப்பாக இவரது படங்களுக்கு குடும்ப ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர். களவாணி படத்தின் மூலம் அதை உருவாக்கிய விமல், அதன்பிறகு ராஜ்கிரண் உடன் இணைந்து நடித்த மஞ்சப்பை படத்தில் சென்டிமென்டால் ரசிகர்களை உருக வைத்தார். அந்த மஞ்சப்பை என்கிற டைட்டில் சென்டிமென்ட் காரணமாக தற்போது அவர் நடித்துள்ள புதிய படத்திற்கு மஞ்சள் குடை என்று பெயர் வைத்துள்ளார்கள்.
சிம்புதேவன், ஜெயம் ராஜா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவம் ராஜாமணி என்பவர்தான் இந்த படத்தை இயக்கியுள்ளார், வால்டர் படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக நடித்த சேரின் காஞ்ச்வாலா தான் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். படமும் நடுத்தர மக்கள் அனைவரும் சந்திக்கும் ஒரு தலையாய பிரச்சனையை மையப்படுத்தி தான் உருவாகியுள்ளது.
ஒவ்வொரு நடுத்தர குடும்பத்திற்கும் எப்படியாவது வாடகை வீட்டில் இருந்து விடுபட்டு சொந்தமாக ஒரு வீடு வாங்கி குடியேற வேண்டும் என்பது வாழ்நாள் ஆசையாக இருக்கும். அதற்காக அந்த குடும்பத்தலைவன், குடும்பத்து உறுப்பினர்கள் பணம் சேர்ப்பது, வீடு வாங்க போராடுவது என அதற்காக சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது.
குடும்பப்பாங்கான படம் என்றாலும் சென்டிமென்ட் ஆக்ஷன் கலந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் சிவம் ராஜாமணி. ரிலீசுக்கு தயாராகி வரும் இந்த படத்தில் ராதாரவி, ஒய்ஜி மகேந்திரன், ரேணுகா, விஜய் டிவி ராமர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.