சுந்தர்.சி இயக்குவது தான் காமெடி படங்களே தவிர நடிப்பது எல்லாம் ஆக்சன், திரில்லர் வகையை சேர்ந்த படங்கள் தான். அந்தவகையில் தற்போது சுந்தர்.சி, ஜெய் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் பட்டாம்பூச்சி. சுந்தர் சியின் சிஷ்யர்களில் ஒருவரும் அவரது சில படங்களை இயக்கியவருமான பத்ரி வெங்கடேஷ் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாள நடிகை ஹனிரோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் சிறப்பம்சமே நடிகர் ஜெய் வில்லனாக நடித்துள்ளார் என்பதுதான். அதுமட்டுமல்ல சைக்கோ கொலைகாரனாகவும் நடித்துள்ளார்.

சுந்தர் சி அந்த சைக்கோ கொலையாளியை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த போராடும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே இந்த படம் குறித்து வெளியான போஸ்டர்களும் வெளியான டீசர் மற்றும் லிரிக் வீடியோ பாடலும் என அனைத்துமே இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தி உள்ளன.

இத்தனை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் வரும் ஜூன் 24ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.