தமிழ் திரையுலகில் எழுபதுகளில் பிரபல கதாசிரியராகவும் முக்கிய தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம். இசைஞானி இளையராஜாவை அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர். சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரையுலக வளர்ச்சியில் ஒரு தயாரிப்பாளராகவும் கதாசிரியராகவும் தனது முக்கிய பங்களிப்பை தந்து ஆறிலிருந்து அறுபது வரை எங்கேயோ கேட்ட குரல் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை அவருக்கு கொடுத்து உறுதுணையாக நின்றவர் பஞ்சு அருணாசலம்.
பஞ்சு அருணாச்சலத்தின் மகனான சுப்பு பஞ்சு தனது தந்தையை போல ஒரு பக்கம் படத்தயாரிப்பில் ஈடுபட்டு வந்தாலும் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் மூலமாக குணச்சித்திர நடிகராக மாறி தற்போது பிசியான நடிகராக நடித்து வருகிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு பஞ்சு அருணாசலம் இயற்கை எய்தினார். அவர் உயிருடன் இருக்கும்போதே அவருக்கு பாராட்டு விழா எடுக்க பலரும் திட்டமிட்டனர். ஆனால் அது நிறைவேறாமல் போயிற்று. இந்தநிலையில் அவரது 70வது ஆண்டு நினைவை கொண்டாடும் விதமாக வரும் ஆகஸ்ட் மாதத்தில் மிகப்பெரிய விழா எடுக்க திட்டமிட்டுள்ளனர்,
இந்த விழாவை பிளாக் ஷீப் யூடியூப் சேனல் பொறுப்பேற்று நடத்த உள்ளது. இந்த விழா ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான அறிவிப்பை வெளியிடும் விதமாகவும் பஞ்சு அருணாசலம் அடிப்படையில் ஒரு எழுத்தாளர் என்பதால் பத்திரிக்கையாளர்களை கூட்டி அவர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர் இமயம் பாரதிராஜா, கங்கை அமரன் திருப்பூர் சிவா, இயக்குனர் ஆர்கே செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, ஆகஸ்ட்டில் நடைபெறும் இந்த விழாவை அனைவரும் சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.