ரேடியோ ஜாக்கியாக இருந்து அதன்பின் திரையுலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி, கதையின் நாயகனாக மாறி, தற்போது இயக்குனராகவும் அவதாரமெடுத்து அடுத்தடுத்த கட்டங்களில் வளர்ச்சி அடைந்து வருபவர் நடிகர் ஆர் ஜே பாலாஜி. மூக்குத்தி அம்மன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இவரும் இவரது கூட்டாளி என்ஜே சரவணனும் இணைந்து இயக்கியுள்ள படம் வீட்ல விசேஷம்.
ஏற்கனவே இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பதாய் ஹோ என்கிற படத்தின் தமிழ் ரீமேக்காகத்தான் இந்தப் படத்தை இவர்கள் உருவாக்கியுள்ளனர். முக்கிய வேடங்களில் ஊர்வசி, சத்யராஜ் நடிக்க கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். வரும் ஜூன் 17ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா தற்போது நடைபெற்றுள்ளது.
கமர்சியல் படங்களை இயக்கி குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் படம் பார்க்க தியேட்டருக்கு வரவழைத்த பெருமைக்குரிய இயக்குனர்கள் என்றால் இயக்குனர்கள் பி. வாசு, கேஎஸ் ரவிக்குமார் மற்றும் சுந்தர்சி ஆகியோரைக் கூறலாம் இந்த மூவரையும் இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு வரவழைத்து சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவப்படுத்தியது வீட்ல விசேஷம் படக்குழு.
இந்த நிகழ்வில் நடிகை ஊர்வசி பேசும்போது, “என்னுடைய மதிப்பை எனக்கு எப்போதும் ஞாபகப்படுத்துபவர் ஆர்ஜே பாலாஜி. இந்த படத்தை இயக்கிய பிறகு ஆர்ஜே பாலாஜி ரஜினி சார் படத்தை இயக்கும் அளவுக்கு திறமை வாய்ந்தவராக மாறியுள்ளார்” என்று பாராட்டு பத்திரம் வாசித்தார்.
ஏற்கனவே தான் இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் படத்திலும் ஊர்வசிக்கு மிகமிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றை கொடுத்து அவரைக் கவுரவித்தவர் ஆர்ஜே பாலாஜி. இந்த படத்திலும் ஊர்வசியை சுற்றியே தான் கதை பின்னப்பட்டுள்ளது.
சத்யராஜ் பேசும்போது, கடப்பா போன்ற சீரியஸான கதாபாத்திரங்களை தேடி வருகின்றன, நம்முடைய பழைய நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்காதா என்று நினைத்துக் கொண்டிருந்தபோதுதான் ஆர்ஜே பாலாஜியிடமிருந்து இந்த வாய்ப்பு எனக்கு வந்தது. என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டபோது உங்களுடைய அந்த பாவமான நடிப்புதான் எங்களுக்கு தேவை என்று கூறி என்னை ஆச்சரியப்பட வைத்தார் ஆர் ஜே பாலாஜி” என்றார் சத்யராஜ்