தமிழ் திரையுலகில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த சுப நிகழ்வு என்றால் அது நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் தான். கடந்த 7 வருடங்களுக்கு மேலாக தீவிரமாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் நிலவியது.
இந்த நிலையில் தங்களது காதலுக்கு புதிய அங்கீகாரம் கொடுக்கும் விதமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர். இந்த நிகழ்வில் இரு தரப்பினருக்கும் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் மிக சிறிய அளவிலான திரையுலக பிரபலங்களும் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.
குறிப்பாக பத்திரிக்கையாளர்கள் திருமண நிகழ்வுக்கு அழைக்கப்படவில்லை. இதை ஈடு செய்யும் விதமாக இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும்.
விக்னேஷ் சிவன் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் நயன்தாரா கடந்த பல வருடங்களாகவே பத்திரிக்கையாளர் சந்திப்பை தவிர்த்து வருபவர். பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்து கொள்வது இல்லை. இந்த நிலையில் தங்களது திருமணம் குறித்த முறையான சந்திப்பு பத்திரிக்கையாளர்கள் முன் நடக்க வேண்டும் என்பதால் இன்று அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது விக்னேஸ்வரன் பேசியபோது, “முதன்முதலில் நானும் ரவுடிதான் படத்திற்காக கதை சொல்வதற்காக நயன்தாராவை இந்த ஹோட்டலில் தான் சந்தித்தேன். அதனால்தான் சென்டிமென்டாக இந்த ஹோட்டலிலேயே பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்த முடிவு செய்தேன்” என்று கூறினார்.