யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் என தனுஷை வைத்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் மித்ரன் ஜவஹர். இதைத்தொடர்ந்து ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு தனுசுடன் அவர் மீண்டும் இணைந்து பணியாற்றி உள்ள படம் திருச்சிற்றம்பலம். இந்தப்படத்தில் நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக இந்த படத்தில் இவர்கள் நடிக்கும் கதாபாத்திர பெயர்களுடன் கூடிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
மேலும் முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரகாஷ்ராஜ் மற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா ஆகியோரின் போஸ்டர்களும் வெளியாகின.
அதேசமயம் நாயகன் தனுஷின் கதாபாத்திர போஸ்டர் மட்டும் வெளியாகாமல் இருந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் அதேசமயம் இருமடங்கு எதிர்பார்ப்பையும் தந்தது. இந்த நிலையில் தனுஷின் கதாபாத்திரம் பெயர்கொண்ட போஸ்டர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
படத்தின் டைட்டிலான திருச்சிற்றம்பலம் என்கிற பெயரிலேயே தனுஷின் கதாபாத்திர பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக சூப்பர்ஸ்டார் ரஜினி மாடர்ன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த சமயத்தில் தனது படங்களுக்கு அண்ணாமலை, அருணாச்சலம் படையப்பா என ஆன்மீக பெயர்களையும் அதேசமயம் கிராமத்து மணம் கமழும் பெயர்களையும் வைத்து ஆச்சரியப்படுத்தினார். ஆரம்பத்தில் அவை ஏதோ போல தோன்றினாலும் போகப்போக அந்த டைட்டில்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியால் மிகவும் வலுப்பெற்று காலத்தால் அசைக்க முடியாத பெயர்களாக நிலைத்து விட்டன.
அந்த வகையில் தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம் என்கிற ஒரு ஆன்மீக பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் நடிப்பது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதில் வியப்பொன்றுமில்லை.