கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமிழில் முன்னணி நடன இயக்குனராக வலம் வருபவர் பிருந்தா மாஸ்டர். இன்றுள்ள அனைத்து நடிகர்களும் நடிகைகளும் அவரால் ஏதோ ஒரு விதத்தில் பல படங்களில் ஆட்டி வைக்கப்பட்டவர்கள் தான்.
நடன இயக்குனராக மட்டும் நட்சத்திரங்களை வேலை வாங்கினால் போதாது என நினைத்தாரோ என்னவோ, இயக்குனராக மாதிரி துல்கர் சல்மான் அதிதி ராவ், காஜல் அகர்வால் ஆகியோரை வைத்து தனது முதல் படமாக ஹே சினாமிகா என்கிற படத்தை இயக்கினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படம் வெளியானது.
இதை தொடர்ந்து தற்போது தனது இரண்டாவது படத்தை இயக்க ஆரம்பித்துள்ள பிருந்தா மாஸ்டர் படத்திற்கு தக்ஸ் என டைட்டில் வைத்துள்ளார்.
இந்த படத்தில் பாபி சிம்ஹா, ஆர்கே சுரேஷ், முனீஸ்காந்த் மற்றும் தற்போது விஜய்சேதுபதி இந்தியில் நடித்துவரும் மும்பை கார் என்கிற படத்தில் நடித்துள்ள வட இந்திய நடிகர் ஹாரூன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் அப்பாணி சரத் அனஸ்வரா ராஜன் என மலையாள நட்சத்திரங்களையும் இந்த படத்தில் களமிறக்கியிருக்கிறார் பிருந்தா மாஸ்டர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்த படம் வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு குமரி மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் நடைபெற்று வருகிறது.