சினிமாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அறிமுகமான காலகட்டத்தில் இருந்தே அவரும் நடிகர் கமலும் பல படங்களில் இணைந்து நடித்தனர். ஒருகட்டத்தில் இருவருக்குமே தனித்தனி ரசிகர் வட்டம், தனித்த வியாபாரம் ஆகியவை உருவானதால் இருவரும் இனிமேல் நாம் தனித்தனியாக நடிப்போம் என்கிற முடிவை எடுத்து கிட்டத்தட்ட 35 வருடங்களாக அதை செயல்படுத்தி வருகின்றனர்.
அவ்வப்போது இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பார்களா என்கிற கேள்வி எழுந்து அப்படியே அமுக்கி விடும். இவர்கள் இருவரிடமும் கேட்டாலும் கூட நேரம் அமைந்தால் பார்க்கலாம் என்பது போன்று கூறி வந்தார்கள். இந்த நிலையில் சமீபகாலமாக முன்னணி நடிகர்கள் இருவர் மற்றும் அதற்கு மேற்பட்டோர் இணைந்து நடிக்கும் பழைய நடைமுறை மீண்டும் புழக்கத்திற்கு வந்துள்ளது. இதற்கு ரசிகர்களிடம் வரவேற்பும் கிடைத்துள்ளது.
அந்தவகையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் இணைந்து நடித்த விக்ரம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பில் பேசும்போது கமலிடம் நீங்கள் மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிப்பீர்களா என பத்திரிகையாளர்கள் கேட்டனர்.. நான் ரஜினியுடன் இணைந்து நடிப்பதற்கு தயாராகவே இருக்கிறேன்.. அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் கூட இயக்கட்டும். ஆனால் அதில் ரஜினிக்கும் லோகேஷ் கனகராஜூக்கும் உடன்பாடு இருக்கிறதா என்பது முக்கியம் என்று கூறியுள்ளார் கமல்.
விக்ரம் படத்தின் வெற்றி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது கமலுக்கு முழு நம்பிக்கையை கொடுத்துள்ளதால் நிச்சயமாக வரும் நாட்களில் இந்த இரண்டு உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடிப்பார்கள் என எதிர்பார்ப்போம்.