பத்து வருடங்களுக்கு முன்பே சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு வெளியான விக்ரம்வேதா படத்தை இயக்கியதன் மூலம் இன்றைய தலைமுறை ரசிகர்களின் ஆதர்ஷ இயக்குனர்களாக மாறியவர்கள் கணவன்-மனைவியான இரட்டை இயக்குனர்கள் புஷ்கர் – காயத்ரி. விக்ரம் வேதா படத்தை தொடர்ந்து இவர்களது அடுத்த படம் எப்போது வெளிவரும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவிக் கொண்டிருக்கும் நிலையில் இவர்களோ அதுபற்றி அலட்டிக் கொள்ளாமல் புதிதாக சுழல் என்கிற வெப்சீரிஸ்க்கு கதை, திரைக்கதை எழுதி உள்ளனர்.
இந்த தொடரில் பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த வெப்தொடரை அனுசரண் மற்றும் பிரம்மா இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர். இந்த வெப்சீரிஸ் வரும் ஜூன் 17ஆம் தேதி முதல் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. விக்ரம் வேதா படத்திற்கு இசை அமைத்த சாம் சி.எஸ் தான் இந்த வெப் தொடருக்கும் இசை அமைத்துள்ளார்.
இதன் உருவாக்கம் குறித்து சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர்கள் புஷ்கர், காயத்ரி பேசும்போது, “படமாக எடுக்கலாம் என்று தான் இதற்கு திரைக்கதை எழுத ஆரம்பித்தோம். எழுத எழுத எழுதிக் கொண்டே இருந்தோம். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் இதன் திரைக்கதையை முடிக்க நேரம் எடுத்துக் கொண்டோம். இதை படமாக எடுத்தால் பத்து மணி நேரத்திற்கு குறையாது.. அதனால் இதை வெப் தொடராக வெளியிடத் தீர்மானித்தோம். திரைப்படத்திற்கு எழுதுவது போல வில்லன், கதாநாயகன் என்கிற கோணத்தில் எழுதாமல் கதையின் போக்கிலேயே நகர்த்திச் சென்று இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்கள்.