சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பஹத் பாசில், நரேன், காளிதாஸ் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியுடன் வெளியான படம் விக்ரம். கமல் நடிப்பில் படம் வெளியாகி கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இந்த படம் வந்தால் கமல் மீண்டும் தனது இழந்த பார்மை திரும்ப பெறுவாரா என்கிற எதிர்பார்ப்பும் கேள்வியும் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் இருந்தது.
ஆனால் இந்த படம் சந்தேகத்திற்கிடமின்றி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளதுடன் கமலின் திரையுலக பயணத்தை மீண்டும் முடுக்கிவிட்டுள்ளது. இந்த படத்தில் பஹத் பாசில், விஜய்சேதுபதி என இளம் முன்னணி நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில் சில நிமிடங்களே வந்து போகும் ரோலக்ஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்து இருந்தார்.
இந்த தகவல் படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களுக்கு தெரிந்ததால் அவரது கதாபாத்திரத்தை ஆவலுடன் எதிர்பார்த்தனர். அவரும் தன் பங்கிற்கு இந்த படத்திற்கு நியாயம் செய்துள்ளார். இந்த படத்திற்காக அவர் சம்பளமே வாங்காமல் நடித்திருந்தார் என்று கமல் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு விலை உயர்ந்த காரையும் அவரது உதவி இயக்குனர்களுக்கு விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களையும் பரிசாக வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் ரோலக்ஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவுக்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசளித்து தனது நன்றியை தெரிவித்துள்ளார் கமல். அதுமட்டுமல்ல சூர்யாவை அவரது வீட்டிற்கே தேடிச்சென்று கமலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது சூர்யாவின் தந்தை சிவக்குமாரும் மகிழ்ச்சியுடன் பங்கெடுத்துக் கொண்டார்.