பதினைந்து வருடங்களுக்கு முன்பு வெளியான காதலில் விழுந்தேன் படத்தில் மூலம் ரசிகர்கள் மனதிற்குள் விழுந்து அங்கேயே ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து அமர்ந்து விட்டார் நடிகை சுனைனா. திரையுலகில் 15 வருடங்கள் தாக்குப் பிடித்து நிற்பது என்பது சாதாரண காரியமல்ல. அந்த வகையில் தற்போது விஷாலுடன் லத்தி படத்தில் நடித்து வரும் சுனைனா அதை தொடர்ந்து ரெஜினா என்கிற திரைப்படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை இயக்குவதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் மலையாள இயக்குனர் டோமின் டீ சில்வா. இவர் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ஸ்டார் என்கிற படத்தை இயக்கியவர்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் உருவாகிறது. இந்தப்படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி போஸ்டரை இயக்குனர் வெங்கட்பிரபு வெளியிட மலையாள போஸ்டரை பிரபல மலையாள இயக்குனர் ஆஷிக் அபு வெளியிட்டார்.
பெண்களை மையப்படுத்தி ஒரு ஸ்டைலிஷ் திரில்லராக உருவாகியுள்ளது இந்த படம். ஒரு மீன் நீரோட்டத்திற்கு எதிராக நீந்த முயற்சிப்பதுபோல ஒரு சராசரி குடும்ப பெண் எப்படி தனக்கு ஏற்படும் அசாதாரண சூழ்நிலையை கடந்து தனது பாதையில் வெற்றிகரமாக பயணிக்கிறார் என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.