வடிவேலுவிடம், “அண்ணே அடிச்சுக்கூட கேப்பாய்ங்க அப்பவும் சொல்லிறாதீங்க” என ஒரு வசனத்தை பேசி அவரை குழப்பி விட்டு தண்ணீருக்குள் காணாமல் போவார் நகைச்சுவை நடிகர் போண்டா மணி. அந்த காமெடி இப்போது மட்டுமல்ல எப்போதுமே டிரெண்டில் இருக்கும். அதற்குமுன் சிறிதும் பெரிதுமாக சில படங்களில் நடித்திருந்தாலும் அந்த காமெடி காட்சியில் நடித்ததன் மூலம் நடிகர் போண்டாமணி ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.
அது மட்டுமல்ல நடிகர் விவேக் உயிருடன் இருக்கும் வரை அவரது படங்களில் தவறாமல் இடம் பெற்று வந்தார் போண்டாமணி. வடிவேலு கடந்த பல வருடங்களாக படங்களில் நடிப்பதை குறைத்து விட்ட நிலையிலும் விவேக் தற்போது உயிரோடு இல்லாத நிலையிலும் பட வாய்ப்புகளுக்காக தடுமாறி வரும் போண்டா மணி சமீபத்தில் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இத்தகவலை அறிந்த நடிகர் சங்கம் அவரது மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொண்டு அவருக்கு உதவிக்கரம் நீட்டியது. தற்போது மருத்துவமனையில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ள போண்டாமணி தனக்கு உதவி செய்த நடிகர் சங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் சங்க துணைத்தலைவர் பூச்சி முருகனை நேரில் சந்தித்து தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
போண்டாமணி போல அங்காடித்தெரு புகழ் நடிகை சிந்து என்பவருக்கும் நடிகர் சங்கத்தின் மூலமாக மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டுள்ளது.