Home News Kollywood ஜென்டில்மேன் 2 இயக்குனரை அறிவித்த கே.டி குஞ்சுமோன்

ஜென்டில்மேன் 2 இயக்குனரை அறிவித்த கே.டி குஞ்சுமோன்

90களில் தமிழ் சினிமாவின் பிரம்மாண்டத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த படம் என்றால் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் படத்தை சொல்லலாம். இந்த படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து இருந்தார் தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமோன். இந்த படத்தின் மூலம் ஷங்கருக்கு ஒரு வெற்றிப்பட இயக்குனராக அறிமுகம் கிடைத்தவுடன் அப்போதுதான் வளரத் துவங்கியிருந்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் புகழை இன்னும் அதிக உயரத்திற்கு இந்தப் படம் எடுத்துச் சென்றது.

அதன் பிறகு அதேபோன்ற பிரம்மாண்டத்தில் சில படங்களை தயாரித்த கே.டி குஞ்சுமோன்  பல வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் திரையுலகில் தனது பட  தயாரிப்பு பணியை துவங்கியுள்ள கே.டி குஞ்சுமோன் ஜென்டில்மேன் 2 படத்தை தயாரிப்பதாக ஏற்கனவே அறிவித்தார்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக பாகுபலி பட புகழ் இசையமைப்பாளர் கீரவாணியை ஒப்பந்தம் செய்து அசத்தினார். அதேபோல கதாநாயகிகளாக நயன்தாரா சக்கரவர்த்தி, பிரியா லால் ஆகிய இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். கதாநாயகனும் இயக்குனரும் மட்டும் அறிவிக்கப்படாத நிலையில் தற்போது இந்த படத்தை இயக்குவது யார் என்கிற சஸ்பென்ஸை உடைத்துள்ளார் கே.டி குஞ்சுமோன்.

நானி நடிப்பில் வெளியான ஆஹா கல்யாணம் என்கிற படத்தை இயக்கிய கோகுல் கிருஷ்ணா தான் இந்த ஜென்டில்மேன் 2 படத்தை இயக்குகிறார். இவர் இயக்குனர் விஷ்ணுவர்தனிடம் இணை இயக்குனராக பல படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக இனி கதாநாயகன் யார் என்கிற சஸ்பென்ஸை கே.டி குஞ்சுமோன் எப்போது உடைப்பார் என காத்திருக்க வேண்டியதுதான்.